ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விரைவில் பாஜக தடை செய்துவிடும்: உத்தவ் தாக்கரே!

தங்களது தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ். (RSS) அமைப்பை விரைவில் மத்தியில் ஆளும் பாஜக தடை செய்துவிடும் என மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் தடை செய்திருக்கிறார். இப்போது பாஜக வேறு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வேறு என பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா பேசி வருகிறார். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்தான் மோடியை மீண்டும் பிரதமராக்க உழைக்கின்றனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ். உதவியே இல்லாமல் தனித்தே ஆட்சி அமைக்க முடியும் என பாஜக தலைவர் ஜேபி நட்டா பேசுகிறார். அப்படியானால் வல்லபாய் பட்டேல் பாணியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்யப் போகிறதா பாஜக?

மத்தியில் 3-வது முறையாக பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிய அமைத்துவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும். பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்யும் பாஜக. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையே போலியான அமைப்பு என பாஜகவினர் விமர்சிக்கவும் செய்வார்கள். இந்துத்துவா அரசியல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சிவசேனாவை சிதைத்தனர். எங்களது சிவசேனாவை போலி சிவசேனா என்கிறது பாஜக. எங்களையே போலி சிவசேனா என பேசுகிற பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் நாளை ஆட்சியில் மீண்டும் அமர்ந்தால் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தையும் தடை செய்துவிடுவார்கள். இப்போது பிரதமர் மோடிக்காக பாடுபடுகிற, ஒரு வேலையாள் போல செயல்படுகிற இந்திய தேர்தல் ஆணையரை, “இந்தியா” கூட்டணி ஆட்சியில் நிச்சயம் வீட்டுக்கு அனுப்பி வைப்போம். இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.

முன்னதாக தி இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பாஜக தலைவர் ஜேபி நட்டா பேட்டி அளித்திருந்தார். அதில், முன்னர் பாஜக சிறிய கட்சியாக இருந்தது. அப்போது ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் உதவி தேவைப்பட்டது. இப்போது பாஜக அப்படியே இல்லாமல் வளர்ந்துவிட்டது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உதவி இல்லாமலேயே பாஜக தனித்து அனைத்து முடிவுகளையும் எடுக்கிற, செயல்படுகிற வலிமை கொண்டதாக இருக்கிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டிய போல மதுரா, ஞானவாபியில் கோவில் கட்டும் திட்டம் இல்லை என கூறியிருந்தார் ஜேபி நட்டா.