டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7 குழந்தைகள் பலி!

டெல்லியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

கிழக்கு டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் ‘நியூ பார்ன்பேபி கேர்’ என்ற குழந்தைகள் மருத்துவமனை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 11.32 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் இருந்த பொதுமக்களும், ஷகீத் சேவா தளம் என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்களும் மருத்துவமனையின் பின்புறம் வழியாக உள்ளே சென்று பல குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். தகவல் கிடைத்து தீயணைப்பு துறையின் 16 வாகனங்களும் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தன. இதற்கிடையே, மருத்துவமனையின் 2-ம் தளத்தில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெடிக்கத் தொடங்கின. இதனால் அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடத்துக்கும் தீ பரவியது.

மருத்துவமனை உள்ள தெரு குறுகலாக இருந்ததால், தீயணைப்பு படையினரால் மீட்பு பணியை எளிதாக மேற்கொள்ள முடியவில்லை. ஆக்சிஜன் சிலிண்டர்கள் தொடர்ந்து வெடித்தபடி இருந்ததால், வீரர்கள் மிக கவனமாக தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து டெல்லி தீயணைப்பு துறை இயக்குநர் அதுல் கார்க் கூறியதாவது:-

மருத்துவமனையில் தீயை அணைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் தொடர்ந்து வெடித்ததால், வீரர்கள் உயிரை பணயம் வைத்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மருத்துவமனை கட்டிடத்தில் இருந்து 12 பச்சிளம் குழந்தைகளை மீட்டோம். ஆனால், அதில் 7 குழந்தைகள் உயிரிழந்துவிட்டன. இது மிகவும் வருத்தமான சம்பவம். துரதிர்ஷ்டவசமாக எங்களால் எல்லா குழந்தைகளையும் காப்பாற்ற முடியவில்லை. மருத்துவமனைக்கு அருகில் உள்ள கட்டிடத்துக்கும் தீ பரவியதால், அங்குள்ள 2 தளங்களில் இருந்து 12 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தோம். ஆய்வுக்கு பிறகே, தீ விபத்துக்கான காரணம் தெரியவரும். மருத்துவமனை நிர்வாகத்திடம் தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) எதுவும் இல்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

விபத்து நடந்த மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் நவீன் கிச்சி. இவருக்கு டெல்லியில் பல மருத்துவமனைகள் உள்ளன. தீ விபத்து சம்பவத்துக்கு பிறகு தலைமறைவான அவரை டெல்லி போலீஸார் நேற்று கைது செய்தனர்.

மருத்துவமனையின் ஒரு தளத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் ஆலை சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாக அப்பகுதியை சேர்ந்த முகேஷ் பன்சால் என்பவர் தெரிவித்தார்.

தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய குழு, மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்த உள்ளதாக ஆணைய தலைவர் பிரியங்க் கானூன்கோ கூறினார்.

இந்நிலையில், தீ விபத்து சம்பவத்துக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ‘‘இந்த விபத்து அதிர்ச்சிஅளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்களுக்குஆழ்ந்த இரங்கல்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, ‘‘டெல்லி மருத்துவமனை தீ விபத்து மனவேதனை அளிக்கிறது. குழந்தைகளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறும்போது, ‘‘தீ விபத்து சம்பவம் மனம் உடையச் செய்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. விபத்துக்கு காரணமானவர்கள் தப்பிக்க முடியாது’’ என்றார்.