தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.35.68 லட்சம் முறைகேடு செய்ததாக, அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யா உட்பட 7 பேர் மீதுலஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்தியநாராயணன் என்ற சத்யா. இவர், கடந்த 2016-ஆம்ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில் தியாகராயநகர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார்.அப்போது தனது தொகுதி மேம்பாட்டு நிதியை கையாடல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தன. முக்கியமாக கட்டிடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்தது. விசாரணையில், மேற்கு மாம்பலம் காசிகுளம் தெருவில் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தக் கூடிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.17 லட்சம் திட்ட மதிப்பீடுதயார் செய்யப்பட்டதும், அதற்குரூ.14,23,368 தொகுதி மேம்பாட்டுநிதியில் இருந்து ஒதுக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதில் அங்கு கட்டப்பட்டதாக போலி ஆவணங்கள், போலி ரசீதுகள் அரசிடம் வழங்கப்பட்டு, அரசிடம் நிதி பெறப்பட்டது. ஆனால் உண்மையிலேயே அங்கு கட்டிடம் எதுவும் கட்டப்படவில்லை. புதிதாக கட்டிடம் கட்டியதாக அந்த பகுதியில் ஏற்கெனவே கட்டப்பட்டு செயல்பாட்டில் இருந்த ஒரு ரேசன்கடையை காட்டி பணம் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதேபோல கோடம்பாக்கம் பிருந்தாவன் தெருவில் இரு இடங்களிலும், கோடம்பாக்கம் ஈஸ்வரன் கோயில் தெருவிலும் பல்வேறு தேவைகளுக்கான கட்டிடங்களை உயர்தரத்தில் கட்டுவதாக தொகுதி மேம்பாட்டு நிதி பெறப்பட்ட நிலையில், மிகவும் தரம் குறைவாக அந்த கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பதும், இந்த கட்டுமானத்தில் பண முறைகேடு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
முன்னாள் எம்எல்ஏ சத்தியநாராயணன், அவருக்கு உடந்தையாக சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டல உதவிபொறியாளர்கள் இளங்கோவன், மணிராஜா, ராதாகிருஷ்ணன், நிர்வாக பொறியாளர் பெரியசாமி, முன்னாள் மண்டல அலுவலர் நடராஜன், தனியார் நிறுவன நிர்வாகி வி.ஏ.பாஸ்கரன் ஆகியோர் இந்த முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெரியவந்தது. இவர்கள் மொத்தம் ரூ.35,68,426 மோசடி செய்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சத்தியநாராயணன் உட்பட 7 பேர் மீதும் ஊழல் தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இவ் வழக்குத் தொடர்பாக வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.