குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள சிறார் விளையாட்டு பொழுதுபோக்கு மையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றம் தானாக விசாரிக்க முன்வந்துள்ளது.
குஜராத்தின் ராஜ்கோட் நகரில் ‘டிஆர்பி கேம்’ என்ற பெயரில் சிறார்களுக்கான விளையாட்டு பொழுது போக்கு மையம் உள்ளது. கோடை விடுமுறை என்பதால் அந்த மையத்தில் ஏராளமான சிறுவர், சிறுமியர் குவிந்திருந்தனர். மாலையில் விளையாட்டு மையத்தின் தரைத்தளத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பரவி விளையாட்டு மையத்தின் 4-வது மாடி வரை கொழுந்துவிட்டு எரிந்தது. சுமார் 5 கி.மீ. தொலைவு வரை கரும்புகை சூழ்ந்தது. இந்த தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் 9 பேர் 16 வயதுக்கு உட்பட்டோர் ஆவர்.
இந்தத் தீ விபத்துச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திட 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை குஜராத் அரசு அமைத்துள்ளது. இந்த குழு விரைவாக விசாரணை நடத்தி 72 மணி நேரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இக்குழுவினர் சனிக்கிழமை இரவு ராஜ்கோட்க்கு வந்து உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்துக்கு முன்பாக சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவரான கூடுதல் ஏடிஜிபி சுபாஷ் திரிவேதி, “இந்தச் சம்பவம் துரதிருஷ்டவசமானது, மிகவும் வருத்தமளிக்கக் கூடியது. இந்தச் சம்பவத்துக்கு காரணமானவர்களைக் கண்டறியவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் விசாரணை விரைவாக தொடங்கப்படும்” என்று தெரிவித்தார். இந்தத் தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
முன்னதாக, தீ விபத்துக் குறித்து ராஜ்கோட் காவல் ஆணையர் ராஜு பார்கவா கூறும்போது, “டிஆர்பி பொழுதுபோக்கு விளையாட்டு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதும் துரிதமாக மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த விபத்தில் பலர் உயிரிழந்து உள்ளனர். அவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளன. எனவே, மரபணு பரிசோதனை மூலம் உடல்கள் அடையாளம் காணப்படும். தீ விபத்து தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொழுது போக்கு மையத்தின் உரிமையாளர் யுவராஜ் சிங் ஜடேஜா தலைமறைவாகிவிட்டார். அவரை தீவிரமாக தேடி வருகிறோம். ராஜ்கோட் முழுவதும் பொழுதுபோக்கு மையங்களை மூட உத்தரவிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ராஜ்கோட்டில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்பு, நிவாரண பணிகளை விரைவுப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். காயமடைந்தவர்களுக்கு உயர்தரமான சிகிச்சை அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த தீ விபத்துக் குறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து மாநில முதல்வர் பூபேந்திர படேலிடம் சனிக்கிழமை இரவு கேட்டறிந்தார்.
இந்நிலையில் 33 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றம் தானாக விசாரிக்க முன்வந்துள்ளது. இன்று விசாரணை நடைபெற உள்ளது.