“எனது சிறுவயதில் பாத்திரம் கழுவியும் தேநீர் பரிமாறியுமே வளர்ந்தேன். எனக்கும் தேநீருக்குமான உறவு மிகவும் ஆழமானது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சமாஜ்வாதி கட்சிக்காக யாரும் தங்களின் வாக்குகளை வீணடிக்க விரும்ப மாட்டார்கள். வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பவர்களுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள். யார் ஆட்சியமைக்க இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் சாமானியர்கள் வாக்களிப்பார்கள். இண்டியா கூட்டணியினர் பற்றி நாட்டு மக்கள் நன்றாக அறிந்துள்ளனர். அவர்கள் ஆழமான வகுப்புவாதிகள், தீவிரமான சாதியவாதிகள், குடும்பவாதிகள். அவர்களின் ஆட்சி அமைந்த போதெல்லாம், இந்த அடிப்படையில் தான் அவர்கள் முடிவெடுத்துள்ளார்கள்.
பிடிபட்ட தீவிரவாதிகளைக் கூட இந்த சமாஜ்வாதியினர் விடுதலை செய்து வந்தனர். அப்படி விடுவிக்க தயக்கம் காட்டிய போலீஸ் அதிகாரிகளை சமாஜ்வாதி அரசு சஸ்பெண்ட் செய்தது. அவர்கள் (சமாஜ்வாதியினர்) ஒட்டுமொத்த உத்தரப் பிரதேசம் மற்றும் பூர்வாஞ்சலை மாஃபியாவின் புகழிடமாக மாற்றிவிட்டனர். சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் உயிரும் நிலமும் எப்போது பறிக்கப்படும் என்று யாருக்கும் தெரியாது. அவர்கள் மாஃபியாக்களையும் வாக்கு வங்கிகளாக பார்த்தனர்.
‘ஸ்வச்தா அபியான்’ திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்ய நாத் தைரியமாக முன்னெடுத்துச் செல்கிறார். பாஜக ஆட்சியில் மாஃபியாக்கள் அஞ்சி நடுங்குகிறார்கள். இந்திய அரசியலமைப்பு தற்போது அவர்களின் (இண்டியா கூட்டணி) இலக்காகி உள்ளது. அவர்கள் எஸ்சி-எஸ்டி-ஓபிசியினருக்கான இடஒதுக்கீட்டை கொள்ளையடிக்க விரும்புகிறார்கள். மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்று நமது அரசியலமைப்பு தெளிவாக தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் போது சமாஜ்வாதி கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீடு பெறுவது போல முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதற்காக அரசியலமைப்பையும் மாற்றுவோம் என்று சமாஜ்வாதி கட்சித் தெரிவித்திருந்தது. மேலும் போலீஸ் மற்றும் பிஏசியில் முஸ்லிம்களுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு வழக்கப்படும் என்று சமாஜ்வாதி கட்சி தெரிவித்திருந்தது. தங்களின் வாக்குவங்கிகளை திருப்திப்படுத்த இவர்கள் எப்படி எஸ்சி, எஸ்டி மக்களின் இட ஒதுக்கீட்டை பறிக்க துணிந்தார்கள்?. நான் ஏழைகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்துப்பட்டவர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.