கருவில் இருக்கும் தனது குழந்தையின் பாலினத்தை தெரிவித்த இர்பான் மன்னிப்பு கேட்ட நிலையில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திய அவர் மீது கருணை காட்டாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வெளிநாட்டில் தெரிந்து கொண்டதோடு அதனை வீடியோவாகவும் வெளியிட்டார் பிரபல யூட்யூபரான இர்ஃபான். அவரது இர்பான்ஸ் வியூ யூடியூப் சேனலில் இந்த வீடியோ வெளியான நிலையில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்தனர். அதே நேரத்தில் இதுபோன்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து அதை பொதுவெளியில் வெளியிடுவது தவறு என்றும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக இர்பானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியதோடு அந்த வீடியோவை நீக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்திற்கும் இர்பானுக்கும் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் கருவின் பாலினத்தை அறிவிப்பது சட்டப்படி குற்றம் எனவும், விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மருத்துவத்துறை எச்சரித்தது. கருவின் பாலினம் அறிவதும் அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள் ஸ்கேன் சென்ட்டர்கள், மருத்துவமனைகள் மீது இந்த அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என தமிழக அரசு விடுத்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே யூட்யூப் நிறுவனத்தின் அறிவுறுத்தலால் இர்பான் அந்த வீடியோவை தனது ‘இர்பான்ஸ் வியூ’ யூட்யூப் சேனலில் இருந்து நீக்கிவிட்டார். இந்த நிலையில் இர்பான் மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதற்கிடையே யூடியூபர் இர்பான் மீதான புகார் குறித்து பொது சுகாதாரத்துறை சார்பில் விசாரணைக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவ குழுவிடம் வாட்ஸ்அப் மற்றும் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட இர்பான் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் வெளியானது. ‘குழந்தையின் பாலினத்தை வெளியிட்டு தெரியாமல் தவறு செய்து விட்டேன்.. என்னை மன்னிக்க வேண்டும்.. எனது சேனலில் இருந்து குறிப்பிட்ட அந்த வீடியோவை நீக்கிவிட்டேன்.. மேலும் இது தொடர்பாக விழிப்புணர்வு வீடியோவையும் வெளியிடுகிறேன்” என்று இர்பான் தெரிவித்த நிலையில் அந்த வீடியோ நீர்க்கப்பட்டதாகவும் இது குறித்த அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிகப்பெரிய குற்றத்தை செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் சரியா? சாதாரண நபர்கள் செய்திருந்தால் அதிகாரிகள் இப்படி விட்டுவிடுவார்களா என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்தது. மேலும் இர்பான் மீதும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் இர்பான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ள இருபானுக்குக் கருணை காட்டாமல் உரிய சட்ட நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்” என தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.