பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இருவரும் அதானி குழுமத்திற்கு எதிராக, அவதூறான கருத்துகளை வெளியிடுவதைத் தடுக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதானி குழுமம் மற்றும் அதன் விளம்பரதாரர் கௌதம் அதானிக்கு எதிரான ஆதாரமற்ற கூற்றுகளை காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் கூறுவதைத் தடுக்க பங்கு முதலீட்டாளர் சுர்ஜித் சிங் யாதவ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நிரந்தர தடை உத்தரவு கோரி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின்போது, அதானி குழுமத்தைப் பற்றி ராகுல் ஆற்றிய உரை முற்றிலும் தவறானது. மக்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக கூறப்பட்டதாகவும், இதனால் அதானி குழும நிறுவனங்களின் மீதான கண்ணோட்டம் முதலீட்டாளர்களின் பார்வையில் தவறாக மதிப்பிடப்படும்; முதலீட்டாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம், ராகுல் காந்தியைச் சுட்டிக்காட்டிப் பேசிய பிரதமர் மோடி, ”அம்பானி மற்றும் அதானி பற்றி பேசுவதை ஏன் திடீரென்று நிறுத்திவிட்டார்? அதானி, அம்பானியிடமிருந்து காங்கிரஸுக்கு டெம்போ வாகனத்தில் கறுப்புப் பணம் பெறப்பட்டு விட்டதா?” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ராகுல், ”பிரதமர் தனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பேசுகிறாரா?” என்று கேட்டார்.
தொழிலதிபர்களுக்கு எதிரான இத்தகைய எதிர்மறையான பிர்சாரம் பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மையையும் முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பையும் ஏற்படுத்துகிறது என்று மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.