போலீஸார் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமியின் கணவர் உட்பட 14 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலையான்குளத்தைச் சேர்ந்த ஓட்டுநர் தங்கதுரை (27). இவர் கடந்த 2019-ல் நண்பர் சங்கருடன் புளியங்குடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பேலீஸார், தங்கதுரையிடம் ஆவணங்களை கேட்டனர். அதற்கு அவர் ஆவணங்களின் நகல்கள் மழையில் நனைத்துவிட்டதால், செல்போனில் உள்ள ஆவணங்களின் பதிவுகளை காட்டுவதாக கூறியுள்ளார். இதை ஏற்க மறுத்த போலீஸார், தங்கதுரையும் சங்கரும் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக கூறி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது போலீஸார் கடுமையாக தாக்கியதாக தங்கதுரை புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவுபடி சங்கரன்கோவில் காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் உட்பட 6 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், தங்கதுரை, சங்கர் ஆகியோரை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது போலீஸாரை தாக்கி இருவரையும் அழைத்துச் சென்றதாக முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமியின் கணவர் முருகன் உட்பட 14 பேர் மீது சங்கரன்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி முருகன் உட்பட 14 பேரும் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் எஸ்.பாஸ்கர் மதுரம் வாதிட்டார். பின்னர் நீதிபதி, “இந்த வழக்கில் தங்கதுரை, சங்கர் ஆகியோர் மது போதையில் வாகனம் ஓட்டி வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவ சோதனையில் இருவரும் மதுகுடிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், தாக்குதலில் காயமடைந்ததாக கூறப்படும் மகேஷ்குமார் என்பவர் தன்னை 5 பேர் டைல்ஸ் கற்களால் தாக்கியதாக கூறியுள்ளார். இதையே மருத்துவரிடமும் கூறியுள்ளார். ஆனால், போலீஸாரை தாக்கியதாக கூடுதல் நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். போலீஸார் மீது வழக்கு பதிவு செய்ய காரணமாக இருந்தவர்கள் என்பதால் மனுதாரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சங்கரன்கோவில் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் இருக்கும் மனுதாரர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது” என உத்தரவிட்டார்.