கடவுள்தான் தன்னை அனுப்பி வைத்ததாக பிரதமர் மோடி அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், நரேந்திர மோடி கடவுள் என்றால் அவர் அரசியலில் ஈடுபடக் கூடாது; கலவரத்தை தூண்டக் கூடாது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:-
ஒருவர் சொல்கிறார் அவரை கடவுளுக்கு எல்லாம் கடவுள் என்று. மற்றொருவர் சொல்கிறார் புரி ஜெகந்நாதரே அவருடையே பக்தர் என்று. அவர் கடவுள் என்றால் அரசியலில் ஈடுபட கூடாது. கடவுள் கலவரத்தை தூண்டக் கூடாது. அவருக்கு கோயில் கட்டுவோம். பிரசாதம், பூக்கள் போன்றவை வழங்குவோம்.
நான் பல்வேறு பிரதமர்களுடன் பணியாற்றி உள்ளேன். வாஜ்பாய், மன்மோகன் சிங், ராஜிவ் காந்தி, நரசிம்ம ராவ், தேவகவுடா ஆகியோருடன் பணியாற்றி உள்ளேன். ஆனால், இவரைப் போன்ற பிரதமரை நான் பார்த்தது இல்லை. அந்த மாதிரியான பிரதமர் நமக்கு வேண்டவே வேண்டாம். இவ்வாறு மம்தா கூறினார்.