ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை பாதிப்பு என்பது அதிகாரத்தைப் பறிப்பதற்காக திட்டமிட்ட சதி என பிரதமர் மோடி பகிரங்கமாக குற்றம் சாட்டி இருப்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
ஒடிஷாவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. ஒடிஷாவில் ஆளும் பிஜூ ஜனதா தளமே மீண்டும் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்கின்றன ஆரூடங்கள். ஒடிஷாவில் எப்படியாவது அதிக லோக்சபா தொகுதிகளைப் பெற வேண்டும்; ஒடிஷாவில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என முனைப்பு காட்டுகிறது பாஜக. இதற்காக ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் செயலாளரும் பிஜூ ஜனதா தளத்தின் எதிர்காலமுமான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியனை இலக்கு வைத்து பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் விமர்சித்து வருகின்றனர். ஒடிஷாவின் மயூர்பஞ்ச்சில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
நவீன் பட்நாயக்கின் நலன் விரும்பிகள் அனைவருமே அவரது உடல்நிலை குறித்து கவலைப்படுகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நவீன் பட்நாயக்கின் உடல்நிலை இவ்வளவு மோசமாகிவிட்டது என கவலைப்படுகின்றனர். நவீன் பட்நாயக்குக்கு மிக வேண்டிய- நெருக்கமான நபர்கள் அவரது உடல்நிலை குறித்து என்னிடம் கவலை தெரிவித்தனர். நவீன் பட்நாயக்கால் சுயமாக எதையும் செய்ய முடியாத அளவுக்கு அவரது உடல்நலனை பாதிப்படையச் செய்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அப்படியானால் நவீன் பட்நாயக்கின் உடல்நலனை திட்டமிட்டு சதி செய்து பாதிப்படையச் செய்தார்களா? என்கிற கேள்வி எழுகிறது. நவீன் பட்நாயக்கிடம் இருந்து அதிகாரத்தை பறித்து அதை அனுபவிக்க நினைக்கும் கூட்டம் குறித்து ஒடிஷா மக்கள் அறிந்து கொள்ளத்தான் வேண்டும். நவீன் பட்நாயக் உடல்நிலையின் மர்மம் குறித்து அம்பலப்படுத்த வேண்டும். ஜூன் 10-ந் தேதிக்குப் பின்னர் ஒடிஷாவில் பாஜக ஆட்சிக்கு வரும்.. அப்போது நவீன் பட்நாயக்கின் உடல் நலன் சீரழிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்துவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.