உளவு செயற்கைக்கோள் ஏவுவதை நிறுத்தமாட்டோம்: வடகொரியா!

விண்வெளியில் உளவு செயற்கைக்கோள் அமைப்பது நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கியமானது என்றும், வட கொரியா அதற்காகத் தயாராவதை ஒருபோதும் நிறுத்தாது என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்களன்று வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் வானில் ஏவிய சில நொடிகளில் வெடித்துச் சிதறியது. இதனைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்புத் துறை அறிவியல் ஆய்வகத்தில் பேசிய கிம் ஜான் உங், ”ராணுவ உளவு செயற்கைக்கோள்கள் வைத்திருப்பது தேசத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தச் செய்யும் முக்கியப் பணியாகும். இதன் மூலம் நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை பாதுகாக்கப்படும்.
இந்த முறை நமது உளவு செயற்கைக்கோள் ஏவுதல் முயற்சி அதன் இலக்கை அடையவில்லை. ஆனால், தோழர்களே நாம் மனம் தளர்ந்து தோல்வி குறித்து வருத்தப்படக்கூடாது. அதற்கு மாறாக நமது முயற்சிகளைத் தீவிரப்படுத்துவோம். நமது தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறுவோம்” என்று கூறியதாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

செயற்கைக்கோள் ஏவும் திட்டம் தோல்வியில் முடிந்த போதிலும், அணு ஆயுதத்தைக் கொண்ட அந்த நாட்டின் விண்வெளி உளவு செயற்கைக்கோள், திரவ ஆக்ஸிஜன் மற்றும் பெட்ரோலை எரிபொருளாகப் பயன்படுத்தும் புதிய வகை எஞ்ஜின் கொண்டுத் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வகை முயற்சி ஒருவகையில் புதிய பாய்ச்சல் என்றும், செயற்கைக்கோள் வடிவமைப்பில் ரஷ்யா உதவி செய்திருக்கலாம் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கடந்தாண்டு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இரு நாடுகளும் இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வடகொரியாவின், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பை பயன்படுத்தி செயற்கைக்கோள் ஏவும் முயற்சி கடந்த ஆண்டில் இருமுறை தோல்வியடைந்த போதிலும் கடந்த நவம்பரில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

வடகொரியாவின் செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வியடைந்த அன்று, அதை விமர்சித்த தென் கொரியா, தங்களுடைய போர் விமானங்கள் பாதுகாப்புத் தாக்குதல் பயிற்சியில் ஈடுபடுவதாக அறிவித்தது. மேலும், தென் கொரியா மற்றும் அமெரிக்க போர் விமானங்கள், இரு கொரிய நாடுகளின் கடற்கறை எல்லையில் தனித்தனியே பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கோபமுற்ற கிம் ஜாங் உன், தென்கொரியா நெருப்புடன் விளையாடுவதாக விமர்சித்துள்ளார் என செய்திகள் வெளிவருகின்றன.