பிரிஜ் பூஷண் சிங் மகனின் பாதுகாப்பு வாகனம் மோதி 2 பேர் பலி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக வேட்பாளரான கரண் பூஷன் சிங்கின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் பிஞ்சு குழந்தை உட்பட 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.

நாட்டையே உலுக்கிய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சர்ச்சையில் சிக்கிய பாஜகவின் பிரிஜ் பூஷன் சிங்கின் மகன்தான் கரண் பூஷன். இந்தியாவுக்கு உலக அரங்கில் பெருமைகளை சேர்த்து பதக்கங்களைப் பெற்றுக் கொடுத்த வீரர்களும் வீராங்கனைகளும் டெல்லி தெருக்களில் நீதி கேட்டுப் போராடினர். மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பாஜகவின் 6 முறை எம்பியான பிரிஷ் பூஷண் சிங்குக்கு எதிராகத்தான் இந்தப் போராட்ட நடைபெற்றது. தேசத்துக்கு தலைநிமிர்வை ஏற்படுத்திய வீராங்கனைகளின் ஆவேச குரலுக்கு நீதி கிடைக்காமலே போனது. இதனால் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கின. ஆனால் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, பிரிஜ் பூஷண் சிங்கை பாதுகாத்தது. மானம் காக்கப் போராடிய மல்யுத்த மங்கைகளை தேசத்தின் புதல்விகளை நடுவீதிகளில் போலீசார் பட்டாளத்தால் ஒடுக்குமுறைகளை ஏவி நசுக்கியது. இத்தகைய பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் பிரிஜ் பூஷண் சிங்கின் மகன் கரண் பூஷண் சிங்குக்கு லோக்சபா தேர்தலில் போட்டியிட பாஜக மேலிடம் வாய்ப்புக் கொடுத்தது. உத்தரப்பிரதேசத்தின் கைசர்கஞ்ச் லோக்சபா தொகுதியில் கரண் பூஷண் சிங் போட்டியிட்டுள்ளார். இந்த நிலையில் கரண் பூஷண் சிங்குடன் பாதுகாப்புக்குச் சென்ற SUV. வாகனம், உ.பி. கோண்டாவில் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற 18 வயது இளைஞரும் பிஞ்சு குழந்தை ஒன்றும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக மரணம் அடைந்தனர். இதனையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்களும் உறவினர்களும் கரண் பூஷண் சிங்கி பாதுகாப்பு வாகனத்தையும் ஓட்டுநரையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. தற்போது கரண் பூஷண் சிங்கின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரமான விபத்தால் உறவினர்கள் அழுது கதறி ஓலமிட்ட காட்சிகள் அப்பகுதியையே பதற வைத்தது.