ஜம்முவில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலி!

பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஜம்மு மாவட்டத்தில் சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 21 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து ஜம்மு மாவட்டத்தின் சோகி சோரா பெல்ட்டில் உள்ள டாங்லி மோர் என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது. 150 அடிக்கு கீழே பள்ளத்தாக்கில் பேருந்து உருண்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

“ஹரியாணாவின் குருஷேத்ரா பகுதியில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி பகுதிக்கு பக்தர்களை ஏற்றிக்கொண்டு இந்த வாகனம் சென்றுள்ளது. விபத்தை அடுத்து, காவல் துறை மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. விபத்தில் காயமடைந்தவர்கள் அக்னூர் மருத்துவமனை மற்றும் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜம்முவுக்கு அருகிலுள்ள அக்னூரில் பேருந்து விபத்துக்குள்ளானதன் காரணமாக ஏற்பட்டிருக்கும் உயிர் இழப்புகள் சொல்ல முடியாத வேதனையை அளித்துள்ளது. விபத்தில் பலியானவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள பதிவில், “ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூரில் பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர் என்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ நிவாரணம் வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நிர்வாகத்தை வலியுறுத்துகிறோம். காங்கிரஸ் தொண்டர்கள் அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். இந்த துயர நேரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் நாங்கள் நிற்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.