அர்விந்த் கெஜ்ரிவாலின் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரும் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்புடைய சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தது. விசாரணைக்கு பிறகு, கடந்த ஏப்ரல் 1-ம் தேதி டெல்லி திஹார் சிறையில் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டார். இதையடுத்து, மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 10–ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஜூன் 2-ம் அவர் சிறைக்கு திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், மருத்துவக் காரணங்களுக்காக இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கெஜ்ரிவால் தனது மனுவில் கூறியிருந்ததாவது:-

எனது எடை மிகவும் குறைந்துள்ளது. ஒருவருக்கு எவ்வித காரணமும் இல்லாமல் ஒரு மாதத்தில் 7 கிலோ எடை குறைந்தால் அது தீவிர பிரச்சினை. எனவே, மருத்துவர்கள் எனக்கு பல்வேறு பரிசோதனைகளை பரிந்துரை செய்துள்ளனர். அனைத்து பரிசோதனைகளும் செய்தால்தான், உள்ளே ஏதாவது தீவிர நோய் இருக்கிறதா, இல்லையா என்பது தெரியவரும் என்றும் கூறியுள்ளனர். நான் 7 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளேன். இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார்.

அவரது மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் மறுப்பு தெரிவித்தது. கெஜ்ரிவாலின் மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவது தொடர்பான முடிவை தலைமை நீதிபதி எடுப்பார் என்று நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, கே.வி.விஸ்வநாதன் ஆகியோரை கொண்ட விடுமுறைக்கால அமர்வு தெரிவித்தது.

இந்நிலையில், இடைக்கால ஜாமீனை நீட்டிக்க கோரும் கெஜ்ரிவாலின் மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அமலாக்கத் துறையின் கைதுநடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளிவைத்துள்ளது. இந்த முக்கிய மனுவுடன் இடைக்கால ஜாமீன் மனு எவ்விதத்திலும் தொடர்பு உடையது அல்ல. ஜாமீன்கோரி சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தை அணுக கெஜ்ரிவாலை உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளதால் இந்த மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கது அல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கெஜ்ரிவால் வரும் ஜூன் 2-ம் தேதி திஹார் சிறைக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.