‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என அறியப்பட்ட ஏடிஎஸ்பி-யான வெள்ளதுரை இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவில் ஏடிஎஸ்பி-யாக பணியாற்றி வந்தவர் வெள்ளதுரை. காவல் உதவி ஆய்வாளராக தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்த வெள்ளதுரை, வீரப்பன் என்கவுன்டர் ஆபரேஷனிலும் பணியாற்றியவர். மேலும், 2003-ம் ஆண்டு சென்னையை கலக்கிய பிரபல தாதா அயோத்தி குப்பம் வீரமணி என்கவுன்டர் செய்யப்பட்டதிலும் முக்கிய பங்காற்றினார். இதேபோல் பத்துக்கும் மேற்பட்ட என்கவுன்டர் சம்பவங்களில் இவருடைய பங்கு இருந்தது. இதை அடுத்து தமிழக போலீஸாரால் ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என வெள்ளதுரை அறியப்பட்டு வந்தார். இன்று அவர் பணி ஓய்வுபெறவிருந்த நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து உள்துறைச் செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 2013-ல், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை டிஎஸ்பி-யாக வெள்ளதுரை பணியில் இருந்தார். அப்போது திருப்பாச்சேத்தி காவல் நிலைய எல்லையில் ராமு என்ற குமார் மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் வெள்ளதுரையின் பங்கு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில்தான் அவர் பணி ஓய்வுபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.