முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ரத்து!

டெல்லியில் நாளை சனிக்கிழமை நடைபெற உள்ள இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில், 6 கட்ட தேர்தல்கள் முடிவுற்ற நிலையில், 7ம் கட்ட தேர்தல் சனிக்கிழமை நடைபெற உள்ளது. தொடர்ந்து, ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், இண்டியா கூட்டணி தலைவர்கள் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பாக சனிக்கிழமை மாலை 3 மணிக்கு டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் அவரது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த தீர்மானித்திருக்கிறார்கள். இக்கூட்டத்தில், கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இறுதிக் கட்ட வாக்குப் பதிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இ்ந்நிலையில், இண்டியா கூட்டணி உருவாகுவதில் முக்கிய பங்காற்றிய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும், இதற்காக முதல்வர் ஜூன் 1-ம் தேதி காலை 7 மணிக்கு டெல்லி புறப்படுகிறார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது, முதல்வரின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பங்கேற்க உள்ளதாகவும், அதற்காக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லி புறப்பட்டுச் செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.