கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் தியானம் மேற்கொண்டு வருகிறார். இந்தச் சூழலில் இதனை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-
அரசியலையும், மதத்தையும் ஒருபோதும் இணைக்கக்கூடாது. அது இரண்டுமே தனித்து தான் இருக்க வேண்டும். ஒரு மதத்தை சேர்ந்தவர் உங்கள் பக்கம் இருக்கலாம். மற்றொரு மதத்தை சேர்ந்தவர் உங்களுக்கு எதிராக இருக்கலாம். அதனால் மதம் சார்ந்த உணர்வுகளையும் தேர்தலையும் இணைப்பது என்பது தவறானது. அவர் கன்னியாகுமரி சென்று நாடகம் போடுகிறார். அவ்வளவு காவலர்கள் பணியில் உள்ளதால் நாட்டின் பணம் தான் வீணாகிறது. இதனால் நாட்டுக்கு தான் தீங்கு. உங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருந்தால் வீட்டிலேயே தியானம் செய்யலாம்.
அவர் என்ன சொன்னாலும் மக்கள் அவரை நம்புவதற்கும், தலைவராக ஏற்றுக் கொள்ளவும் தயாராக இல்லை. பணவீக்கம், விலைவாசி மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றை மக்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளனர். ஆந்திராவில் பாஜக சில இடங்களில் வெல்லலாம். ஆனால், தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகாவில் வாய்ப்பே இல்லை. இங்கு காங்கிரஸ் தான் வெல்லும். உத்தரப் பிரதேச மாநிலத்திலும் காங்கிரஸ் கூட்டணிக்கு இதே நிலை தான். மத்தியில் கூட்டணி அரசு தான் அமையும் என நான் நினைக்கிறேன். இவ்வாறு கார்கே தெரிவித்தார்.
காந்தி குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு, “குஜராத் மாநிலத்தில் இருந்து வரும் நபருக்கு காந்தி குறித்து தெரியவில்லை என்றால் நாம் என்ன சொல்ல முடியும். நமது தேசத்தின் தந்தை என போற்றப்படும் ஒருவரை நீங்கள் ஏன் பேசுவதே இல்லை. அவரும் குஜராத்தி தான். நாங்கள் காந்திக்கு மதிப்பு தருகிறோம். நீங்கள் கோட்சே உடன் சென்றீர்கள்” எனவும் கார்கே தெரிவித்தார்.