பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா நேற்று ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பினார். பெங்களூரு விமான நிலையத்தில் அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து பெங்களூரு திரும்புவதற்கான விமான டிக்கெட்டை பிரஜ்வல் முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து நேற்று (மே 30) முனிச் நகரில் இருந்து புறப்பட்ட அவர் நள்ளிரவில் பெங்களூரு திரும்பினார். கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு விசாரணைக் குழு தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அங்கு கடந்த 26-ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியானது. மேலும் அவருடைய வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பெண்கள் அளித்த புகாரின்பேரில் பிரஜ்வல் மீது 4 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனிடையே கடந்த ஏப்ரல் 26-ம் தேதி இரவு பிரஜ்வல் ஜெர்மனிக்கு தப்பியோடினார். சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் 2 முறை லுக் அவுட் நோட்டீஸும் ஒரு முறை புளூ கார்னர் நோட்டீஸும் பிறப்பித்தனர். அவரது தூதரக பாஸ்போர்ட்டை முடக்குமாறு வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதினர். இதனிடையே, தேவகவுடா உள்ளிட்டோர் உடனடியாக நாடு திரும்புமாறு பிரஜ்வலுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ‘‘மே 31-ம் தேதிகாலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் முன்னிலையில் நேரில் ஆஜராகிறேன். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்” என தெரிவித்தார்.
முன்னதாக, பிரஜ்வல் ரேவண்ணா தரப்பில் முன் ஜாமீன் கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தனஞ்செய், ‘‘இந்த மனுவை அவசர மனுவாக கருதி உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என கோரினார். அதனை ஏற்க மறுத்த நீதிபதி, மே 31 வழக்கை விசாரிப்பதாக கூறினார். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.