இடைக்கால ஜாமீன் கேட்ட கெஜ்ரிவால் வழக்கில் ஜூன் 5ம் தேதி தீர்ப்பு!

கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் தொடர்பான மனு மீதான தீர்ப்பு ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் , அமலாக்காதுறையால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் கடந்த மே 10ஆம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவின் படி, 21 நாட்கள் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்த கெஜ்ரிவால், நாளை ஜூன் 2இல் திகார் சிறையில் சரணடைய வேண்டும். இதற்கிடையில், தனது மருத்துவ காரணங்களை மேற்கோள் காட்டி மேலும் 7 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பு கோரிக்கை வைத்து இருந்தது. இந்த மனுமீதான விசாரணையில் அமலாக்கத்துறை பதில் அளிக்க டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டு இருந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் எஸ்.வி.ராஜு ஆஜராகினார். கெஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஹரன் ஆஜராகினார்.

அமலாக்கத்துறை சார்பில் வாதிடுகையில், கெஜ்ரிவால் நாளை சரணடைய வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மாற்ற முடியாது. அதனால், தற்போது இடைக்கால ஜாமீன் மனுவை ஏற்று விசாரணை மேற்கொள்ளவும் முடியாத சூழல் உள்ளது. கெஜ்ரிவாலின் உடல்நிலை குறித்த தவறான அறிக்கைகள் தான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த பொய்யான அறிக்கைகளில் பல போலியான தரவுகளே உள்ளன. சரணடைய ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அந்த தேதியை மற்ற முடியாது என வாதிட்டது.

இதனை அடுத்து வாதிட்ட கெஜ்ரிவால் தரப்பு, உடல்நிலை குறித்த உண்மை தன்மையை சந்தேகிக்க முடியாது. கெஜ்ரிவாலின் உடல்நிலை குறைவு என்பது உண்மையானது. நான் நோயுற்று உள்ளதால் அதனை காரணமாக கூறி ஜாமீன் கேட்க எனக்கு உரிமை உள்ளது என சிறப்பு நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பு வாதிட்டது. மேலும், இது இடைக்கால ஜமீனை நீட்டிக்க கோரிய மனு இல்லை என்றும், கெஜ்ரிவாலின் மருத்துவ காரணங்களை கூறி இடைக்கால நிவாரணமாக 7 நாட்கள் ஜாமீன் கேட்கிறோம் என்றும் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா, மருத்துவ காரணங்களுக்கான இடைக்கால ஜாமீன் தொடர்பான மனு மீதான தீர்ப்பு ஜூன் 5ஆம் தேதி (நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு மறுநாள்) வெளியிடப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நாளை (ஜூன் 2) திகார் சிறையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய உள்ளார்.