மே 5 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் தேர்வை நடத்துமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மருத்துவ படிப்புக்காக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர முடியும். இந்த தேர்வு சிபிஎஸ்இ தரத்தில் இருப்பதால் மாநில பாடப்பிரிவை படித்த மாணவர்களால் அந்த தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை என்பது தமிழக அரசின் கவலையாக உள்ளது. இதற்காகத்தான் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்ணை வைத்து மருத்துவ படிப்புகளுக்கு சேர்க்கை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஆனாலும் இதை மத்திய அரசு செவி கொடுத்து கேட்டபாடில்லை. ஆண்டுதோறும் நீட் தேர்வை நடத்திக் கொண்டுதான் வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மே 5 ஆம் தேதி நீட் நுழைவு தேர்வு நடந்து முடிந்தது. இந்த தேர்வில் இயற்பியல் மட்டுமே சற்று கடினமாக இருந்ததாகவும் மற்ற பாடங்கள் எளிதாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தேர்வு முடிந்த ஓரிரு நாட்களிலேயே நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக இணையதளத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களை மறுத்த தேசிய தேர்வு முகமை எந்த ஒரு வினாத்தாள் கசிவையும் சமூக ஊடக பதிவுகள் எல்லாமே அடிப்படை ஆதாரமற்றவை என தெரிவித்திருந்தது. ஒவ்வொரு கேள்வித்தாளுக்கும் கணக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தாள்கள் கசிந்து முறைக்கேடு நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த முறைகேட்டில் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மே 17ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட எந்த ஒரு தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கு கோடைக்கால விடுமுறைக்கு பிறகு ஜூலை மாதம் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மே 5 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வை நடத்த கோரிக்கை எழுந்துள்ளது. வினாத்தாள் லீக்கான விவகாரத்தால் நேர்மையாக படித்து உழைத்து தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதே அனைவரின் கவலையாக இருக்கிறது.