நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடுவிடம் சரத் பவார் பேச்சுவார்த்தை?

பாஜக இல்லாத கூட்டணி ஆட்சியை அமைக்க, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் உடன் சரத் பவார் பேசியதாக தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக சரத்பவார் விளக்கம் கொடுத்துள்ளார்.

நாடு முழுவதும் 543 தொகுதிகளில் 7 கட்டங்களாக லோக்சபா நடந்து முடிந்துள்ளது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் பாஜக 244 இடங்களில் முன்னணியில் உள்ளது. தனிப்பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக 244 இடங்களில் மட்டுமே வெல்லும் வாய்ப்பு உள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் இன்னும் 30 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் இனி இதற்கு வாய்ப்பு இல்லை. எனவே தேசிய ஜனநாயக கூட்டணியை நம்பியே பாஜக ஆட்சி அமைக்க முடியும். அதே நேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரின் ஜேடியூ பீகாரில் 15 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆந்திர பிரதேசத்தில் 14 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இவர்கள் என்டிஏ கூட்டணிதான். ஆனாலும் மோடியுடன் அத்தனை நெருக்கம் இல்லை. இதனால் அவர்கள் கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டால் ஆட்சி அமைக்க சிக்கல் ஏற்படும். பாஜகவின் வெற்றியை தீர்மானிப்பதில் மகாராஷ்டிரா மாநிலமும் ஒன்றாக இருந்தது. அங்கு சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரசுடன் பாஜக கூட்டணி வைத்து போட்டியிட்டது. எனினும் காங்கிரஸ் + உத்தவ் சிவசேனா + சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியே அங்கு முன்னணியில் உள்ளது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி வெறும் 19 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதில் சரத் பாவரின் தேசியவாத காங்கிரஸ் மட்டும் 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இதற்கு சரத்பவாரின் அனுபவம் மற்றும் சாமர்த்தியமே காரணம். 83 வயதில் ஒருங்கிணைத்து பணி செய்ததால், இப்போது மகாராஷ்டிராவில் பாஜக மண்ணை கவ்வி உள்ளது. இந்த சூழலில் தான், சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் உடன் சரத் பவார் பேசி வருவதாக தகவல் வெளியானது. பாஜக இல்லாத கூட்டணி ஆட்சியை அமைக்க இவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறாராம். இந்தியா கூட்டணியை ஆதரித்தால் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என உறுதியளித்ததாகச் சொல்லப்படுகிறது. தெலுங்கு தேசம் இந்தியா கூட்டணியை ஆதரித்தால் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சரத்பவார் பேசியதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார் இதனை மறுத்துள்ளார். “சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் அல்லது வேறு யாருடனும் நான் பேசவில்லை” என்றார்.