மக்களவைத் தேர்தலில் 542 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், “வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்படுவது ஏன்” என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், “தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் ஏன் தேர்தல் முடிவுகள் வேகமாக புதுப்பிக்கப்படவில்லை. கடந்த சில மணிநேரமாக ஏன் இந்த செயல்முறை மெதுவாக உள்ளது? வேகத்தை குறைக்க உத்தரவு எங்கிருந்து வந்தது?. உ.பி மற்றும் பீகாரில் உள்ள பல தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணுவதில் ஏன் இவ்வளவு தாமதம்? இது முற்றிலும் அசாதாரணமானது” என்று விமர்சித்து இருந்தார்.
தொடர்ந்து இன்னொரு பதிவில், “உத்தரப் பிரதேசத்தின் மகராஜ்கஞ்ச், பன்சி, மீரட் மற்றும் முசாபர்நகர் வேட்பாளர்கள், அந்தந்த தொகுதிகளில் வெற்றிபெற மாவட்ட அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். ஆட்சி மாறுகிறது. ஜனநாயகத்தை சீர்குலைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை நிர்வாக அதிகாரிகள் நினைவில் கொள்ள வேண்டும்” என்று எச்சரித்துள்ளார்.