கேரளாவில் பாஜக கால் ஊன்றலாம், ஆனால் தமிழகம் பெரியார் மண், இங்கு வரவே முடியாது என திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி லோக்சபா எம்பி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் வெற்றி பெற்றுள்ளார். அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் தேர்தல் அதிகாரியிடம் பெற்றார். அப்போது அவருடன் அமைச்சர் மனோ தங்கராஜும் இருந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மோடி மீடியாவின் கருத்துக் கணிப்பை மக்கள் இன்று சுக்குநூறாக்கியுள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை ஸ்டாலின் 40- க்கு 40 , நாடு நமதே என்று சொன்னார். 40 தொகுதிகளையும் வென்றுள்ளோம். நாளைய தினம் நாடையும் வெல்லுவோம். அதற்கான சூழல் இன்று கனிந்திருக்கிறது. இந்த நாடு ஒரு மதசார்பற்ற நாடு என்ற தன்மை நீடிக்க வேண்டும். இது கடுகு அளவும் பிறழ்ந்து விடக் கூடாது என்பதற்காக மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளார்கள்.
பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பிரதமர் மோடி தார்மீக பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இதை விட ஒரு சவால் இல்லை. தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் வாரணாசி தொகுதியிலும் இந்த முறை குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தையே அவர் பெற்றுள்ளார். தனித்து 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவோம் என சொன்னார்கள். ஆனால் அது வரவே இல்லை. பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க முடியாத நிலை உள்ளது.
முன்பு என்டிஏவிலிருந்து விலகி வெளியேறிபோது சந்திரபாபு நாயுடு, “மோடி அரசால் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை எல்லாம் எப்படி நிர்பந்தப்படுத்தப்பட்டது. மோடியை விட மோசமான பிரதமர் இருக்கவே முடியாது. இந்த நாட்டில் உள்ள அனைத்து தலைவர்களும் அவரைவிட சிறந்தவர்கள்தான். எல்லா கட்சிகளிலும் இவரை விட வலுவான பிரதமர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள்” என மிக தெளிவாக கடந்த காலங்களில் சந்திரபாபு நாயுடு பேசியிருந்தார். நிதிஷ்குமாரும் அப்படியே பேசியுள்ளார். ஒரு பிரதமரை எல்லோரும் சேர்ந்து தேர்வு செய்யக் கூடிய காலம் தந்த கொடையாகவே இதை பார்க்கிறோம். இதை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கேரளாவில் பாஜக ஒரு இடத்தில் கால் பதித்து விட்டது. ஆனால் தமிழகத்தில் வரமுடியாது. இது பெரியார் பூமி. கருணாநிதி தந்த திட்டங்கள். அவர் தந்திருக்கும் சமூகநீதிக்கான மறுமலர்ச்சி. இவை என்றும் வரலாற்றில் நிலைத்திருக்கக் கூடிய அளவிற்கு இந்த மக்கள் நன்றியுடன் இருக்கிறார்கள் என்பதற்கு மிகப் பெரிய சான்று தமிழகத்தில் பாஜக கால் பதிக்காதது!
கருணாநிதி எந்த கனவை கண்டாரோ எந்த பயணத்தை துவங்கி வைத்தாரோ, அதை ஸ்டாலின் இன்று தொடர்ந்து தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இதற்கு இதைவிட ஒரு சான்று இனி உலகத்திற்கே தேவையில்லை. எங்களை அழிப்போம், ஒழிப்போம் என சொன்னவர்கள் இன்று ஓடி ஒளிந்துவிட்டார்கள். கூனி குறுகிவிட்டார்கள். மக்கள் இன்று எங்களுடன் எழுந்து நிற்கிறார்கள். இது சாதாரண வெற்றி அல்ல. ஜனநாயகத்திற்கும் சமூகநீதி அரசியலுக்கும் கிடைத்திருக்கக் கூடிய மகத்தான வெற்றி. அண்ணாமலை ஒரு காலி பெருங்காய டப்பா. அவர் தோல்வி முன்பே அறிந்ததுதானே! தற்போது பாஜக 10 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது என்றால் அது பாமக உள்ளிட்ட கட்சியினரின் ஓட்டு, தனிப்பட்ட ஓட்டு அல்ல. ராமர் கோயில் கட்டிய அயோத்திக்குள்பட்ட தொகுதியிலேயே பாஜக தோற்றது இந்த நாட்டு மக்கள் எப்படி ஜனநாயகத்தின் மீதும் மதசார்பற்ற தன்மை மீதும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு மிகச் சிறந்த எடுக்காட்டு. இனியாவது இவர்கள் மத அரசியலை விட்டுவிட்டு ஜனநாயக பாதைக்கு பாஜக திரும்புமா என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது. இவ்வாறு மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.