இது முடிவல்ல.. இதுதான் ஆரம்பம்: விஜய பிரபாகரன்!

இது முடிவல்ல, தொடக்கம்தான் என விருதுநகர் லோக்சபா தேர்தலில் தோல்வியுற்றது குறித்து தேமுதிகவை சேர்ந்த விஜயபிரபாகரன் பதிவு செய்துள்ளார்.

விருதுநகர் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகளை பெற்று வென்றுள்ளார். இவரை தொடர்ந்து தேமுதிகவின் விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகளை பெற்று வெறும் 4,379 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகாவோ 1,66,271 வாக்குகளை பெற்று 3ஆவது இடத்தை பெற்றார். மாணிக்கம் தாகூருக்கு கடுமையான டஃப் கொடுத்தார் விஜய பிரபாகரன். சுருக்கமாக சொல்ல போனால் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு பயம் காட்டினார் என்றே சொல்லலாம். கடைசியில் நடந்த ட்விஸ்ட்டாக விஜய பிரபாகரன் குறைந்த வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு கூட மாணிக்கம் தாகூரை எதிர்த்து போட்டியிட்ட அழகர்சாமி ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். ஆனால் விஜய பிரபாகரனோ குறைந்த அளவு வித்தியாசம்தான். எனினும் முதல் தேர்தலிலேயே விஜய பிரபாகரனுக்கு இத்தனை லட்சம் பேரின் நம்பிக்கை, வாக்குகளாக கிடைத்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து விஜய பிரபாகரன் தனது பதிவில் கூறியிருப்பதாவது:-

குறைந்த அளவிலான வித்தியாசத்தில் தோல்வியுற்றதற்கு மன்னிக்கவும். எனக்கு வாக்களித்த அனைத்து அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி. இது முடிவல்ல! இதுதான் ஆரம்பம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணிக்காக உழைத்த அனைத்து நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் முதற்கண் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாபெரும் ஜனநாயகத் திருவிழாவில், பல்வேறு கட்டமான சவால்களை எதிர்த்து, ஒரு கோடிக்கு மேல் வாக்குகளை பெற்று அசைக்க முடியாத ஒரு சக்தியாக, இந்த கூட்டணியை மாற்றிய அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் வாக்களித்த பொதுமக்கள் அனைவருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக, கேப்டன் விஜயகாந்த் அவர்களின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேமுதிக போட்டியிட்ட 5 தொகுதிகளிலுமே வாக்களித்த அனைத்து வாக்காளப் பெருமக்களுக்கு தேமுதிகவின் பொதுச் செயலாளராக நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்! கடைசி வரை வீரமாகப் போராடி, தேர்தல் களத்தில், ஒரு சரித்திரத்தை படைக்கும் அளவில் நாம் போட்டியிட்டு இருக்கிறோம். அனைத்து வேட்பாளர்களும் இந்த தோல்வியை படிக்கல்லாக மாற்றி வெற்றிக்கனியை பறிக்க கடுமையாக உழைத்து, 2026 நமது இலக்காக இப்பொழுதிலிருந்தே உழைத்து பெரிய வெற்றியைப் பெற வேண்டும். இந்த தேர்தலில் வாக்களித்த பொது மக்களுக்கும் இந்த கூட்டணிக்காக, உழைத்த அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் அனைத்து முன்னாள் அமைச்சர் பெருமக்களுக்கும், உறுப்பினர்கள் மற்றும் இந்த கூட்டணிக்காக உழைத்த அனைவருக்குமே தேமுதிக சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். நாளை நமதே! அரசியலில் வெற்றியும் தோல்வியும் அனைவருக்கும் சகஜமான ஒன்று என்பதை ஏற்றுக்கொண்டு மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று நினைத்து அடுத்த வெற்றிக்காக நாம் தயாராவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.