கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பாதுகாப்பு படை பெண் காவலர்!

சண்டீகர் விமான நிலையத்தில் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் மத்திய பாதுகாப்பு படை பெண் காவலர் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டார் கங்கனா ரனாவத். இவர் 5,37,022 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங் 4,62,267 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். இருவருக்குமான வித்தியாசம் 74,755 ஆகும். கங்கனா இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்தவர். சண்டிகர் விமான நிலையத்திற்கு கங்கனா ரனாவத் வந்தார். அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை பெண் அதிகாரியுடன் ஏதோ வாக்குவாதம் நடந்தது. அப்போது திடீரென அந்த அதிகாரி, கங்கனாவின் கன்னத்தில் அறைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை கங்கனா தீவிரவாதிகள் என விமர்சித்ததற்காக அந்த பெண் பாதுகாப்பு அதிகாரி கங்கனா கன்னத்தில் அறைந்தார். இது குறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த கங்கனா ரனாவத் 2006 ஆம் ஆண்டு பாலிவுட்டில் நுழைந்து நிறைய படங்களில் நடித்துள்ளார். அண்மையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்திலும் தமிழில் அவர் நடித்துள்ளார். பிரபல நடிகையாக இருந்தாலும் இவருக்கு சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை. பாலிவுட்டில் வாரிசுகளின் பிள்ளைகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து பேசியுள்ளார். கரண் ஜோஹர் உள்பட பலரை அவர் வெளிப்படையாகவே தாக்கி பேசியுள்ளார்.

அது போல் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தையும் கங்கனா கொச்சைப்படுத்தி பேசியிருந்தார். அது போல் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது டுவிட்டர் பக்கத்தில் கங்கனா, “காலிஸ்தானி பயங்கரவாதிகள் இன்று அரசை தங்களுக்கு ஏற்றப்படி வளைக்கலாம். ஆனால் நாட்டின் ஒரே ஒரு பெண் பிரதமர் (இந்திரா) அவர்களைத் தனது ஷூவில் போட்டு நசுக்கினார். அவர் ( இந்திரா) இந்த தேசத்திற்கு எவ்வளவு துன்பம் கொடுத்திருந்தாலும் கொசுக்களைப் போல் தன் உயிரைப் பணயம் வைத்து அவர்களை (காலிஸ்தானி பயங்கரவாதிகளை) நசுக்கினார். அவர் உயிரிழந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் கூட இன்றும் அவரது (இந்திரா) பெயரைக் கேட்டால் அவர்கள் நடுங்குகிறார்கள். அவரை போன்ற ஒரு நபர் தான் இப்போது தேவை” எனப் பதிவிட்டுள்ளார்.

அது போல் சீக்கியர்களை காலிஸ்தானியர்கள் என்றும் 1984 ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் குறித்தும் அவர் கூறிய கருத்துகள் மிகப் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தனை சர்ச்சைக்களுக்கும் நாயகியான கங்கனாவுக்கு பாஜக சீட் தராது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் அவருக்கு மண்டி லோக்சபா தொகுதியில் போட்டியிட வழங்கப்பட்டது. அவரும் எம்பியாகிவிட்டார்.

இந்நிலையில் தான் கங்கனா ரனாவத், டெல்லி செல்வதற்காக சண்டீகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்கு பிறகு, வந்தபோது விமானத்தில் ஏறுமிடத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரி குல்விந்தர் கௌர் அவரை கன்னத்தில் அறைந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதுகுறித்து பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட விடியோ பதிவில், ”ஊடகங்கள் வாயிலாகவும், தொலைபேசியிலும் எனது நலம் விரும்பிகளிடமிருந்து எனக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன. நான் பாதுகாப்பாக இருக்கிறேன், எனக்கு ஒன்றும் ஆகவில்லை, நன்றாக இருக்கிறேன். சண்டீகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை முடிந்து நான் வெளியே வந்தவுடன், இரண்டாவது கேபினில் இருந்த சிஐஎஸ்எஃப் பெண் செக்யூரிட்டி ஒருவர் என் முகத்தில் அறைந்தார். விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறேன். ஆனால், பஞ்சாபில் அதிகரித்து வரும் தீவிரவாதம் குறித்து கவலை கொள்கிறேன்” என்றார்.