முதல்வர் ஸ்டாலினை சந்தித்த 40 புதிய எம்.பி.க்கள் வாழ்த்து பெற்றனர்!

தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட திமுக எம்.பி.க்கள், திமுக அமைச்சர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு நடைபெற்ற இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றார். அன்று இரவே சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அப்போது, பட்டாசு வெடித்தும் மேளதாளங்கள் முழங்கியும் திமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

அதைத்தொடர்ந்து, அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ளகலைஞர் அரங்கில், திமுக உட்பட இண்டியா கூட்டணியைச் சேர்ந்த 40 எம்.பி.க்கள், பொறுப்பு அமைச்சர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரை சந்தித்தார். மாவட்ட வாரியாக, வந்து முதல்வருக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்ததுடன், முதல்வரின் வாழ்த்துகளையும் பெற்றனர். அப்போது, பொறுப்பு அமைச்சர்கள், எம்.பி.க்கள், மற்ற கட்சி மற்றும் திமுக நிர்வாகிகளை முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்தனர். திமுக சார்பில், கனிமொழி எம்.பி., ஆ.ராசா, கதிர்ஆனந்த் உள்ளிட்ட அனைத்து எம்.பி.க்களும் வாழ்த்து பெற்றனர்.

காங்கிரஸ் சார்பில் அதன் மாநிலதலைவர் கு.செல்வ பெருந்தகை தலைமையில், எம்.பி.க்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாக்கூர், விஷ்ணுபிரசாத், கோபிநாத், ராபர்ட் புரூஸ், விஜய் வசந்த், விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பர்ட் உள்ளிட்டோர் முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர். அப்போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித்தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதுதவிர, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள், ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் தலைமையில் அவரது கட்சி எம்.பி.யான நவாஸ்கனி மற்றும் நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள், நிர்வாகிகளும் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சியில், திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைருமுகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., திராவிடர் கழகதலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முதல்வருடனான சந்திப்புக்குப் பிறகு, இரா.முத்தரசன் கூறும்போது, ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் தோழமை கட்சிகள் அனைத்தையும் அரவணைத்து ஒருங்கிணைத்து தொகுதி பங்கீட்டை வெற்றிகரமாக முடித்தார். அவரது தேர்தல் பிரச்சாரத்தின் காரணமாகவும், நல்ல திட்டங்களை அரசு நிறைவேற்றியதன் காரணமாகவும் இந்த அணி மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. மொத்தத்தில் பாஜகவை மக்கள் ஏற்கவில்லை என்றார்.

கே.பாலகிருஷ்ணன் கூறும்போது, “மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணிக்கு தலைமை தாங்கிய முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இரவு பகலாக பணியாற்றினார். இந்த தேர்தலில் மோடி அரசின் வெறுப்பு அரசியலை இந்திய மக்கள் நிராகரிக்கிறார்கள் என்ற முடிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.