“வரும் 9-ம் தேதி அன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கலாம். ஆனால், அதை ஐந்து ஆண்டு காலம் தொடர செய்வது சவாலானது” என சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) கட்சியின் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சஞ்சய் ராவத் கூறுகையில், “தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சிகள் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்கலாம். ஆனால், நாளை அவர்கள் எங்களை ஆதரிப்பார்கள். அவர்கள் எங்களுடன் இணையலாம். பாஜகவின் பொது சிவில் சட்டம், அக்னி வீரர் திட்டம் போன்றவற்றை அவர்களது கூட்டணி கட்சிகளே எதிர்க்கின்றன.
இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மோடி தெரிவித்தார். அந்த இட ஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவித்தவர் சந்திரபாபு நாயுடு. இப்படி கூட்டணியில் நிறைய சிக்கல்கள் உள்ளன. வரும் நாட்களில் அதற்கு எதிர்ப்புகள் எழும். அமித் ஷா, பங்குச் சந்தை விவகாரங்களில் தலையிட்டு வருகிறார். பங்குச் சந்தை ஊழலில் அவருக்கு தொடர்பு இருக்கலாம்” என மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இண்டியா கூட்டணியில் 21 தொகுதிகளில் சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) போட்டியிட்டது. அதில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.