தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் சீமானின் நாம் தமிழர் கட்சி, திருமாவளவனின் விசிக மற்றும் தமிழக, புதுச்சேரி எம்பிக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றது. அதோடு 8 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் வாங்க்கியதால் தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை விசிக பெற உள்ளது. விசிகவுக்கு மாநில கட்சி அந்தஸ்து கிடைக்க இருக்கிறது. அதேபோல சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் இந்த தேர்தல் மூலம் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற உள்ளது. தமிழ்நாட்டில் மொத்த உள்ள 39 தொகுதிகளிலும் சேர்த்து நாம் தமிழர் கட்சிக்கு 8.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் நாம் தமிழர் கட்சி மாநிலக் கட்சி என்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும் நிலையை அக்கட்சி எட்டியுள்ளது.
இந்த நிலையில், தான் நாம் தமிழர் கட்சிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வரும் நடிகர் விஜய், விரைவில் பிரமாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய் கட்சியின் மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் செல்வேன் என்று சீமான் கூறினார். இத்தகய சூழலில் தான், சீமானுக்கு விஜய் தெரிவித்துள்ள வாழ்த்து அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.