”கல்விச் சீர்திருத்தம் செய்வதற்கு தடையாக உள்ள சிந்தனைகளை எதிர்கொண்டு, பாரதத்தின் பாரம்பரிய கல்வி முறையைக் கொண்டுவர வேண்டும்” என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
கோவையில் ‘புதிய பாரதத்தில் கல்வி சீர்திருத்தங்கள்’ என்ற தலைப்பிலான இரண்டு நாள் கருத்தரங்கை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று துவக்கி வைத்தார். தமிழக உயர் கல்வி ஆசிரியர் சங்கம், கேரள மாநில ஆசிரியர் சங்கம் மற்றும் டெல்லி அகில பாரதிய ராஷ்ட்ரிய சாக்ஷிக் மகாசங்க ஆசிரியர் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
உலகளவில் செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், நானோ தொழில்நுட்பம் ஆகியவை அனைத்துத் துறைகளிலும் அபரிமிதமான வளர்ச்சி அடைந்து வருகிறது. இதுபோன்ற சூழலில் அறிவு சார்ந்த வளர்ச்சி மிகவும் முக்கியமாகும். ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பாக பொருளாதாரத்தில் இந்தியா முதன்மை நாடாக இருந்தது. 1947-ல் நாடு சுதந்திரமடைந்தபோது பொருளாதாரத்தில் நாம் 6-வது இடத்தில் இருந்தோம். 2014 வரை 11-ம் இடத்தில் இருந்தோம். கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் 5-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளோம். 2047-ல் உலகின் 3-வது பொருளாதார சக்தியாக நாம் மாறுவோம். ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறிய போதும், காலனி ஆதிக்கம் அனைத்து துறைகளிலும் இருந்து வந்துள்ளது.
அந்த வகையில் புதிய பாரதத்தை படைக்கும் வகையில், 2020-ல் தேசிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டது. இதில் இணக்கமாக, கூட்டாக செயல்படுதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. நாட்டின் கலாச்சார பாரம்பரியம் ஆன்மாவாக விளங்குகிறது. பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் ஆகியவை இந்திய அறிவு சார் அமைப்பு என்று இருப்பதை பாரதிய அறிவுசார் அமைப்பு என பெயர் மாற்றம் செய்ய பரிசீலிக்க வேண்டும். பாரத நாட்டில் தான் உலகிலுள்ள அனைவரும் ஒரே குடும்பம் என கருதும் அறிவும், சிந்தனை ஆற்றலும் எழுந்துள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளிர், வசுதெய்வ குடும்பகம் ஆகியவை தான் முன்னோர்கள் நமக்கு வழங்கிச் சென்ற முக்கிய போதனைகள் ஆகும்.
நாட்டில் அறிவுசார் காப்புரிமை பெறுவது, புத்தொழில் நிறுவனங்கள் தொடங்குவது குறைவாக இருந்தது. இப்போது நாட்டில் 1.25 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விண்வெளி துறையில் முக்கிய அம்சமாக, தமிழகத்தில் உள்ள புத்தொழில் நிறுவனம் ஒன்று, அண்மையில் 3டி (முப்பரிணாம) தொழில்நுட்பத்தில் செமி கிரையோஜெனிக் இஞ்ஜின் மூலம் ராக்கெட் உருவாக்கி விண்ணில் ஏவி பெருமை சேர்த்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பாடத்திட்டங்களில் தேசிய விடுதலை இயக்கங்கள் தவிர்க்கப்பட்டு, மிகைப்படுத்தப்பட்ட ஆங்கிலேய காலனி ஆதிக்கம் குறித்தும், திராவிட இயக்கங்கள் குறித்த பாடங்களும் தான் இடம்பெற்றுள்ளது. அதேசமயம் சுதந்திரப் போராட்டத்தில் ரத்தம் சிந்தி உயிர்நீத்த சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் மறைக்கப்பட்டு வருகிறது. வன்முறை சம்பவங்களைக் காரணம் காட்டி சிவகங்கையில் மருது பாண்டியர் சகோதரர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்படாமல் இருப்பது ஏற்புடையது அல்ல.
கொரோனா தொற்றுக்கு நமது விஞ்ஞானிகள் தடுப்பூசி தயாரித்து உலக நாடுகளுக்கு வழங்கியது நினைவுக்கூரத்தக்கது. கல்வி அமைப்பை சீர்திருத்தம் செய்வதற்கு தடையாக உள்ள சிந்தனைகளை எதிர்கொண்டு பாரம்பரியமிக்க கல்வியறிவை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.