நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருகிற நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 4-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. தேசிய அளவில் 67 மாணவர்கள் முதல் இடம் பிடித்தனர். இதில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் 720 / 720 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவிர, நெகட்டிவ் மதிப்பெண்கள் இல்லாமல் பலருக்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதும் நீட் தேர்வு முடிவுகள் குறித்து தேசிய அளவில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தேசிய தேர்வுமுகமை, என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் தேர்வு மையங்களில் நேரத்தை செலவிட்டதற்கான கருணை மதிப்பெண்கள் காரணமாக மாணவர்கள் அதிக மதிப்பெண்பெற்றுள்ளதாக தெரிவித்தது. இந்த விளக்கம் போதுமானதாக இல்லை என்று அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்களின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
முதலில் நீட் தேர்வுத் தாள் கசிந்தது. தற்போது தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஒரே மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றிருப்பது நீட் தேர்வில் நிகழ்ந்திருக்கும் பல்வேறு முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, அதில் தேர்ச்சி பெறாத ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகும் செய்திகள் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றன.
இந்தச் சூழலில், நீட் முறைகேடு குறித்து மாணவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு புறக்கணிப்பது ஏன்? மாணவர்களின் புகார்களை விசாரித்து தீர்வு காண்பது அரசின் பொறுப்பு அல்லவா? இந்த முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.