குற்ற பின்னணி உள்ளவர்கள் பாஜகவில் சேர்க்கப்பட்டது என்பது உங்களுடைய பரிந்துரையில் மாநில தலைவராக இருந்த எல்.முருகன் காலகட்டத்தில்தான் என்றும் அதற்கான பட்டியலை நான் தருகிறேன் என்றும் முன்னாள் ஆளுநர் தமிழிசைக்கு திருச்சி சூர்யா சிவா பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்றதும்தான் பாஜகவில் ரவுடிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக தமிழிசை சவுந்திரராஜன் அளித்த பேட்டிக்கு அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதுகுறித்து திருச்சி சிவா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அக்கா வணக்கம். தேசியத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற பாடம் எடுக்கக்கூடிய தாங்கள் ஒரு முன்னாள் மாநிலத் தலைவர் பொது ஊடகங்களில் இப்படி கருத்து பதிவிடுவது சரியா? குற்ற பின்னணி உள்ளவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்க்கப்பட்டது என்பது தங்களுடைய பரிந்துரையில் மாநிலத் தலைவர் ஆக்கப்பட்ட எல்.முருகன் காலகட்டத்தில்தான் வேண்டுமென்றால் நான் பட்டியல் தருகிறேன். கட்சியின் வளர்ச்சியையும் தனி நபருக்கு கிடைக்கும் புகழையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்படி புலம்புகிறீர்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது தாங்கள் மாநில தலைவராக இருந்தபோது கட்சியில் சேர்வதற்கு கூட ஆட்கள் முன்வரவில்லை என்பதே நிதர்சனம்.
அதிமுக கூட்டணி இருந்திருந்தால் அதிகம் இடங்கள் ஜெயித்திருக்கும் என்று தேசியத்தின் முடிவுக்கு எதிரான உங்கள் கருத்து கட்சி கட்டுப்பாடா? பாஜகவுக்குள் தேர்தல் நிதிகள் சரியாக போய் சேரவில்லை என்ற பொதுத்தளத்தில் நீங்கள் பேசிய பிறகுதான் இன்று தமிழ்நாடு முழுவதும் அது பேசும் பொருளாக ஆகியது இது கட்சி கட்டுப்பாடா? இப்படி எல்லாம் கட்டுப்படாத முன்னாள் மாநிலத் தலைவரின் கருத்திற்கு அமைதி காக்கும் தேசியம் அதற்கு எதிர் வினையாற்றும் எங்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அதை சந்திக்க தயாராக உள்ளோம். பதவிக்காக நாங்கள் இந்த கட்சியில் இல்லை.. அண்ணனின் அன்புக்காக மட்டுமே உள்ளோம். இவ்வாறு திருச்சி சூர்யா சிவா தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்று தற்போது 2024 லோக்சபா தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தமிழகத்திலிருந்து இரட்டை இலக்கத்தில் பாஜக எம்பிக்கள் நாடாளுமன்றம் செல்வர் என அண்ணாமலை ஒவ்வொரு முறையும் சூளுரைத்தார். இதையடுத்து அந்த தேர்தலில் பாஜக சார்பில் 19 பேர் களமிறக்கப்பட்டனர். மற்ற இயக்கங்களை சேர்ந்த 4 பேர் என்டிஏவுடன் கூட்டணி அமைத்து தாமரை சின்னத்தில் போட்டியிட்டனர். இந்த நிலையில் போட்டியிட்ட ஒருவர் கூட வெல்லவில்லை. இது தற்போது விவாத பொருளாகியுள்ளது. தற்போது முன்னாள் ஆளுநர் தமிழிசைக்கும் அண்ணாமலைக்கும் இடையே பெரும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழிசை ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், நான் கட்சிக்காக கடுமையாக உழைப்பேன், உள்கட்சி ஐடி நிர்வாகிகளை கடுமையாக எதிர்க்கிறேன், எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன். நான் இங்கேதான் இருப்பேன். ஆளுநர் பணியை விட்டு நான் ஏன் இங்கே வந்தேன் என சிலர் கேட்கிறார்கள். கட்சியினருக்கு நான் கேட்கிறேன். ஆளுநர் பணியை விட்டுவிட்டு வந்ததற்கு நானே கவலைப்படவில்லை. உங்களுக்கு என்ன கவலை ? என கேள்வி எழுப்பியிருந்தார். அது போல் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் நிச்சயம் வென்றிருக்கலாம் என தமிழிசை கூறியதை அடுத்து அவரை வடஇந்தியாவுக்கு ஆளுநராக அனுப்புங்கள். அண்ணாமலையை தனியாக செயல்பட விடமாட்டார் என்றெல்லாம் தமிழிசை மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.