பாஜகவில் தமிழிசைக்கு ஒரு நீதி, நிர்மலா சீதாராமனுக்கு ஒரு நீதி: செல்வப்பெருந்தகை

பாஜகவில் தமிழிசைக்கு ஒரு நீதி, நிர்மலா சீதாராமனுக்கு ஒரு நீதி என்கிற போக்குதான் உள்ளது என செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 543 இடங்களில் 293 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி. 232 தொகுதிகள் என்கிற வலுவான இடங்களுடன் எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் உள்ளடங்கிய இந்தியா கூட்டணி அமர்கிறது. அதே சமயம் தேர்தல் முடிவுகள் வெளியான அதே நாளில் நீட் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்ட சூழலில், அதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த சூழலில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். நீட் விலக்கு மசோதா இப்போதுதான் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் என்பது எவ்வளவு கொடூரமானது என்பதை காங்கிரஸ் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்தில் வலியுறுத்தி வருகிறது” என்று தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே நீட் தேர்வு முடிவுகள் வெளியானது ஏன் என சந்தேகம் எழுப்பிய செல்வப்பெருந்தகை, “ஜூன் 3ஆம் தேதி அல்லது 5 ஆம் தேதி அறிவித்திருக்கலாமே.. ஜூன் 4ஆம் தேதி வெளியிடும்போதே ஏதோ தவறு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இப்போது மதிப்பெண்களில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை உடனடியாக மோடி ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சர் பதவி வேண்டாம் என நடிகர் சுரேஷ் கோபி கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “கேரளாவில் கால் பதித்துவிட்டோம் என்று இப்போதுதான் பாஜகவினர் கூறிவந்தனர். ஆனால், சுரேஷ் கோபி மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என மறுக்கிறார். பாஜகவின் நிலை எப்படி இருக்கிறது என்று பார்த்திருப்பார், கேரள மக்களிடம் பதில் சொல்ல முடியாது என நினைத்து மத்திய அமைச்சர் பதவியை வேண்டாம் என்று கூறியுள்ளார்” எனத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சரவையில் மீண்டும் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் இடம்பெற்றுள்ளனரே என்ற கேள்விக்கு, “தமிழிசை சவுந்தரராஜனை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தென்சென்னையில் போட்டியிடுங்கள் என்றது பாஜக தலைமை. மத்திய அமைச்சர் எல்.முருகனை நீலகிரியில் போட்டியிடச் சொன்னார்கள். நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கருக்கு ஒரு நீதி.. எல்.முருகன், தமிழிசைக்கு ஒரு நீதி என்பதுதான் பாஜகவின் சித்தாந்தம். கட்சிக்காக உழைத்து, குரல் கொடுத்து வெயிலிலும் மழையிலும் அலைந்த தமிழிசையை கைவிட்டுவிட்டார்கள். மாநில பிரிவினை பேசும், மாநிலத்திற்கு எதிராக செயல்படும் நிர்மலா சீதாராமனை அமைச்சராக்கியுள்ளனர். இதுதான் பாஜக” என்றும் தெரிவித்தார்.