வரும் 24-ம் தேதி 18-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம் செய்துகொள்வார்கள் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ) அறுதிப் பெரும்பான்மையை பெற்றது. கடந்த 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் என்டிஏ அரசு பதவியேற்றது.
இந்த சூழலில் மக்களவை தேர்தலுக்கு பிறகு வரும் 24-ம் தேதி 18-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு அறிவித்துள்ளார். முதல் மூன்று நாட்கள் புதிய எம்பிக்களின் பதவியேற்பு விழா நடைபெறும். அதேபோல், சபாநாயகர் தேர்வும் நடைபெறும்.
தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜூன் 27 அன்று உரையாற்ற உள்ளார். ஜூன் 27ம் தேதி குடியரசுத் தலைவர் உரைக்கு பிறகு பிரதமர் மோடி தனது மந்திரி சபையை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெறும். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், அதன்பின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் பதில் அளிக்கும் நிகழ்வும் நடைபெறும். தொடர்ந்து கூட்டத்தொடர் ஜூலை 3ம் தேதி நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.