சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் தாக்கல் செய்த மனு வழக்கமான நடைமுறைகளின் படியே விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வு, மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. நீதிபதி சுவாமிநாதன், வழக்கின் தகுதி அடிப்படையில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். நீதிபதி பாலாஜி, அரசுத்தரப்பு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனால் வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி ஜெயச்சந்திரன், ஆட்கொணர்வு மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்ற நீதிபதி பாலாஜி உத்தரவை ஏற்றுக் கொண்டார். அத்துடன் வழக்கை ஆட்கொணர்வு வழக்கை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி பரிந்துரைத்தார். அதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் E.ராஜ்திலக் ஆஜராகி, கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, இந்த வழக்கை வழக்கமான நடைமுறையின் படியே, வரிசையாக தான் விசாரிக்கமுடியும் எனவும், ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணை முடிந்த பின்னரே இந்த மனு இறுதி விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது, இடைக்காலமாக விடுதலை செய்வதற்கு உத்தரவிட வேண்டுமென மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் கோரிக்கை விடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், இந்த கோரிக்கை ஏற்கதக்கதல்ல என கூறினார். இதனையடுத்து, இடைக்கால நிவாரணம் கோரி அரசிடம் மனு அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த மனுவை எட்டு வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.