குவைத் புறப்பட்டார் கேரளா அமைச்சர் வீணா ஜார்ஜ்!

குவைத் தீ விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 24 பேர் பலியானது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து கேரளா அமைச்சர் வீணா ஜார்ஜ், குவைத் புறப்பட்டுச் சென்றார்.

குவைத்தின் மன்கஃப் நகரில் 6 மாடி அடுக்கு மாடிக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 43 இந்தியர்கள் உயிரிழந்தனர். இவர்களில் 24 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்; 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். கேரளாவைச் சேர்ந்த 24 பேரில் 17 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த நிலையில் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் குவைத் தீ விபத்தில் படுகாயமடைந்தோருக்கு தலா ரூ1 லட்சம் வழங்கப்படும் எனவும் முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருக்கிறார்.

இதனிடையே கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் பலியான நிலையில் அம்மாநில அமைச்சர் வீணா ஜார்ஜ், குவைத் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக மத்திய இணை அமைச்சர் கேவி சிங் குவைத் சென்றடைந்துள்ளார்.

குவைத்தில் 50-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இந்த கொடிய தீ விபத்து நிகழ்ந்த கட்டிடத்தின் உரிமையாளர் கேரளாவைச் சேர்ந்தவர். கேரளாவை சேர்ந்த ஆபிரகாம்தான் இக்கட்டிட உரிமையாளர். கட்டிட உரிமையாளர் ஆபிரகாமை உடனே கைது செய்ய குவைத் அரசு உத்தரவிட்டிருந்தது. குவைத் தீ விபத்தில் பலியான தமிழர்கள் குறித்த விவரம் தற்போதுதான் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. குவைத் தமிழ்ச் சங்கங்கள் உதவியால் இந்த தகவல்களைத் தமிழ்நாடு அரசு பெற்று வருகிறது. ஏற்கனவே தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத் துறை அவசர உதவி எண்களையும் அறிவித்திருந்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், குவைத் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா அலி அல் யாஹ்யாவிடம் தொலைபேசியில் பேசி உள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா அலி அல் யாஹ்யா விடம் பேசினேன். தீ விபத்தை அடுத்து குவைத் அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து அப்போது விளக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் என்றும் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியாவுக்கு அனுப்ப வலியுறுத்தப்பட்டது. காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்த்தன் சிங் இன்று குவைத் சென்ற பிறகு நிலைமையை மதிப்பாய்வு செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்த இந்தியர்களின் உடல்களைக் கொண்டுவர இந்திய விமானப் படை விமானம் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்களை குவைத் அதிகாரிகள் டிஎன்ஏ பரிசோதனை செய்து வருகிறார்கள். உயிரிழந்த இந்தியர்களின் உடல்களைக் கொண்டு வர இந்திய விமானப்படை விமானம் தயார் நிலையில் உள்ளது” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.