பிரதமராக 3வது முறை பதவியேற்றபிறகு பிரதமர் மோடி வரும் 20ம் தேதி சென்னை வர உள்ளார்.
பிரதமராக 3வது முறை பதவியேற்றபிறகு முதல்முறையாக வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, சென்னை எழும்பூர் – நாகர்கோயில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைக்க உள்ளார். மேலும் ரயில்வே சார்ந்த பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 6 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை – கோவை, சென்னை- நெல்லை, சென்னை – மைசூர், கோவை- பெங்களூர், சென்னை- விஜயவாடா உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன.
மேலும், சென்னை எழும்பூர் – நாகர்கோயில் இடையே வாராந்திர வந்தே பாரத் ரயில் சேவையும் இயக்கப்படுகிறது. ஆனால் சென்னை எழும்பூர்-நாகர்கோயில் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை தினசரி ரயில் சேவையாக இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.இதையடுத்து, தெற்கு ரயில்வே நிர்வாகம், ரயில்வே வாரியத்திடம் இதுகுறித்து பரிந்துரை செய்தது. பரிந்துரையின் அடிப்படையில், சென்னை எழும்பூர் – நாகர்கோயில் இடையே தினசரி வந்தே பாரத் ரயில் சேவையை இயக்க அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் 20-ம் தேதி சென்னை வருகிறார். பிரதமர் வருகையையொட்டி, ரயில்வே அதிகாரிகள் அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.