மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 வெற்றி கிடைத்திருப்பதால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கும், இந்த அரசுக்கும் இருக்கிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருப்பூர் அங்கேரிபாளையத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா இன்று (சனிக்கிழமை) நடந்தது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், திருப்பூர் மாவட்டத்தில் 265 ஊராட்சிகளைச் சேர்ந்த 410 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ. 20 கோடி மதிப்பிலான 33 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
கருணாநிதி நூற்றாண்டு விழா நிறைவையொட்டி, தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட 33 வகையான விளையாட்டுகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. தொழில்துறைக்கு மட்டுமின்றி திருப்பூர் மாவட்டம், விளையாட்டுத்துறைக்கும் சிறப்பான பெருமையை சேர்க்க வேண்டும்.
கேலோ இந்தியா போட்டிகளில் தமிழகம் 2-ம் இடம் பிடித்தது. அதற்குக் காரணம், தமிழக வீரர், வீராங்கனைகள் தான். இந்தியாவிலேயே விளையாட்டுத்துறை என்றால், அது தமிழகம் தான் என்று சொல்லும்படி பல்வேறு புதிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். விளையாட்டு, நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களுக்கும் சென்று சேர வேண்டும். அதற்கு இங்கு வழங்கப்படும் விளையாட்டு உபகரணங்கள் பயன் அளிக்கும்.
கிராமப்புறங்களில் இருந்து விளையாட்டுத்துறையில் மாணவர்கள் சாதிக்க வேண்டும். ஒரு விளையாட்டு வீரருக்கு இருக்க வேண்டிய அத்தனை குணங்களும், கருணாநிதிக்கு இருந்ததால் தான் இந்தத் திட்டத்துக்கு கலைஞர் பெயர் சூட்டினோம். நீண்ட தூரம் ஓடினால் தான், அதிகமான உயரத்தைத் தாண்ட முடியும். அதற்கு உழைக்க வேண்டும். விளையாட்டு உபகரணங்கள் பெறும் நீங்கள் ஒவ்வொருவரும் அரசின் முகமாக இருந்து சாதிக்க வேண்டும். தாராபுரத்துக்கு விளையாட்டு மைதானம் கோரியுள்ளனர். வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார். மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 வெற்றி பெற்றுள்ளோம். ஆகவே ஒவ்வொரு தொகுதிக்கும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கும், இந்த அரசாங்கத்துக்கும் உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில், சர்வதேச தடகள வீரர் ஒலிம்பியன் தருண் அய்யாசாமி, கேலோ இந்தியா போட்டியில் தங்கம் வென்ற தேசிய வீராங்கனை பவினா ஆகியோர் மேடையில் உதயநிதி ஸ்டாலின் அருகில் அமர வைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.