ஆர்எஸ்எஸ் அங்கம் போல என்சிஇஆர்டி செயல்படுகிறது: ஜெய்ராம் ரமேஷ்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) மாணவர்களுக்கான பாடத்திட்ட புத்தகத்தில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் அங்கம் போல என்சிஇஆர்டி செயல்படுகிறது என காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளதாவது:-

நீட் 2024-ம் ஆண்டுக்கான தேர்வில் வழங்கப்பட்ட கருணை அடிப்படையிலான மதிப்பெண்களுக்கு என்சிஇஆர்டி மீது குற்றம் சுமத்தியுள்ளது தேசிய தேர்வு முகமை (என்டிஏ). இதன் மூலம் தன் மீதான கவனத்தை என்டிஏ மடை மாற்றுகிறது.

இருந்தாலும் கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அங்கம் போல என்சிஇஆர்டி செயல்பட்டு வருகிறது. அதன் பணி பாடப்புத்தகங்களை தயாரிப்பது. மாறாக துண்டு பிரசுரங்கள் தயாரிப்பது அல்ல.
திருத்தம் செய்யப்பட்ட 11-ம் வகுப்பு பாடப்புத்தகம் மதச்சார்பின்மையை விமர்சிக்கிறது. இதன் மூலம் அதனை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சிகளையும் விமர்சிக்கிறது என சொல்லலாம்.

மதச்சார்பின்மை நாட்டின் அரசியலமைப்பின் அடிப்படைகளில் ஒன்று என்பதை பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தெளிவு செய்துள்ளன. இதன் மூலம் அரசியலமைப்பை தாக்குகிறது என்சிஇஆர்டி. நேஷனல் கவுன்சில் ஃபார் எஜுகேஷனல் ரிசேர்ச் மற்றும் டிரையினிங் நிறுவனமாக என்சிஇஆர்டி இருக்க வேண்டும். நாக்பூர் அல்லது நரேந்திர கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமாக அது இருக்க கூடாது. பள்ளியில் என்னை பாக்குவமாக்கிய என்சிஇஆர்டி புத்தகங்கள் அனைத்தும் இப்போது தரம் தாழ்ந்து உள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.