விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது சரிதான்: மதுரை ஆதினம்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் அதிமுக தேர்தலை புறக்கணித்திருக்கும் முடிவு சரிதான் என்று மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் எம்எல்ஏவாக இருந்த திமுகவை சேர்ந்த புகழேந்தி மறைவை அடுத்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான மனுத்தாக்கல் கடந்த 14 ஆம் தேதியே துவங்கியது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆளும் திமுக சர்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக வேட்பாளர் சி அன்புமணி களமிறக்கப்பட்டுள்ளார். இதேபோல் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா வேட்பாளராக களமிறக்கப்படுகிறார்.

அதிமுக சார்பில் பலமான வேட்பாளர் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. இதேபோல் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. தேர்தல் என்பது ஜனநாயக ரீதியாக நேர்மையாக நடக்க வேண்டும். ஆனால் ஆட்சியாளர்களால் தேர்தல்கள் தவறாக நடத்தப்படுகின்றன. எனவே தொண்டர்களின் உழைப்பு, பணம், நேரத்தை விரயம் செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்து இருந்தது. அதிமுக தேர்தலை புறக்கணித்தது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. அதிமுக தேர்தலை புறக்கணித்திருப்பது வேடிக்கையானது என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் விமர்சித்து இருந்தார். இதேபோல் மறைமுகமாக பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் விலகியுள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன.

இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது நல்லது தான் என்று மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார். இது குறித்து மதுரை ஆதினம் கூறியதாவது:-

நித்யானந்தா மடத்தை விட்டு அப்போதே நீக்கப்பட்டு விட்டார். இதனால் இனி அவர் மதுரை ஆதினம் மடத்தில் நுழைந்தாலும் நான் விடமாட்டேன். நம் நாட்டுக்குள் வந்தாலே அவர் கைது செய்யப்படுவார். விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடாமல் அதிமுக புறக்கணித்து இருப்பது நல்லது தான். இடைத்தேர்தலில் எப்போதும் ஆளும் கட்சியே வெற்றி பெறும். அரசியல் கருத்துக்களை நான் ஏன் சொல்லக்கூடாது. ஜனநாயக நாடு. நான் ஓட்டு போடுகிறேன்.. என்று கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள் அல்லவா?.. நானும் ஓட்டு போடுகிறேன். தமிழகத்தில் இருக்கிறேன். நான் ஒரு தமிழன். தமிழர்களை கொத்து கொத்தாக கொன்றாங்க.. அவங்க வெற்றி பெற்றுவிட்டாங்க.. அதனை மக்கள் மறந்துட்டாங்களே என்று எனக்கு ஆதங்கம். அதனால் தான் சொன்னேன். இவ்வாறு அவர் கூறினார்.