நீர்வளத்துறை இணையமைச்சர் கர்நாடகா ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதை ஏற்க முடியாது: டிடிவி!

தமிழகத்தை பாலைவனமாக்கும் மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது – அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் கர்நாடகா ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டியே தீருவோம் என்ற முடிவில் கர்நாடக அரசு பிடிவாதமாக இருக்கும் நிலையில், இதுதொடர்பாக சுற்றுச் சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம். காவிரியின் உரிமையைக் காக்க தமிழக அரசு தொடர்ந்து போராடும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுள் ஒன்று காவிரிப் பிரச்சினை. தமிழ்நாட்டுக்கான முழு உரிமை உள்ளதும் காவிரி நீர் ஆகும். எனவே, காவிரி நீர் உரிமையைப் பெறுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு எந்த அளவுக்கும் சென்று போராடும் எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதவியேற்ற மோடி தலைமையிலான அமைச்சரவையில் நீர்வளத்துறை இணையமைச்சராக வி.சோமண்ணா பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கர்நாடகத்தை சேர்ந்தவர். பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசில் கர்நாடக வீட்டுவசதித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதே மேகதாது அணைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த இவர், ஒன்றிய நீர்வளத்துறை இணை அமைச்சராக சோமண்ணா நியமிக்கப்பட்டபோதே அதற்கு தமிழக விவசாயிகளிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தது. மேகதாது அணை சிக்கல் தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு, கர்நாடகம், புதுவை ஆகிய மாநிலங்களின் அரசுகள் பேச்சு நடத்த வேண்டும் என்று ஒன்றிய நீர்வளத்துறை இணை அமைச்சர் வி.சோமண்ணா கூறியிருக்கிறார். நீதியின் பக்கம் நிற்க வேண்டிய ஒன்றிய அமைச்சர் கர்நாடகத்தின் குரலாக பேசுவதாக தமிழகத்தில் இருந்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. அவர் பதவி விலக வேண்டுமெனவும் விவசாயிகள் போர்க் கொடி உயர்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் கர்நாடகா ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கிடையே பேச்சுவார்த்தையின் மூலம் மேகதாது அணைத் திட்டம் தொடங்கப்படும் என மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் திரு.சோமண்ணா அவர்கள் கூறியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தமிழகத்தின் அனுமதியின்றி காவிரியின் குறுக்கே எந்த ஒரு அணையும் கட்ட முடியாது என உச்சநீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் பலமுறை தெளிவுபடுத்திய பிறகும், மேகதாது அணை குறித்த அமைச்சர் திரு.சோமண்ணா அவர்களின் பேச்சு தமிழக விவசாயிகளிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரு.சோமண்ணா அவர்களை மத்திய நீர்வளத்துறை இணையமைச்சராக நியமிக்கும் போதே, தமிழகத்தில் எழுந்த எதிர்ப்புக் குரல்களை நியாயமாக்கும் வகையில் அவரது செயல்பாடுகளும் ஒருதலைபட்சமாக அமைந்திருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டி தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கர்நாடக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க முயற்சிப்பது திரு.சோமண்ணா அவர்கள் வகிக்கும் அமைச்சர் பதவி மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

எனவே, இனியாவது இரு மாநிலங்களுடையேயான பிரச்னைகளை அதிகப்படுத்தும் விதமான சர்ச்சைக்குரிய பேச்சுக்களை தவிர்ப்பதோடு, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான அமைச்சராக நடுநிலையோடு செயல்பட வேண்டும் என திரு.சோமண்ணா அவர்களை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.