ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமீன் மனு: போலீஸார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் நிர்வாகியான ஃபெலிக்ஸ் ஜெரால்ட் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவுக்கு போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் காவலர்கள் மற்றும் பெண் காவல்துறை அதிகாரிகளை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், சவுக்கு சங்கரின் நேர்காணலை சமூக வலைதளங்களில் ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் தலைமை நிர்வாகியான ஃபெலிக்ஸ் ஜெரால்டையும் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், தனக்கு ஜாமீன் கோரி ஃபெலிக்ஸ் ஜெரால்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “நீண்ட காலமாக சிறையில் வைத்திருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, ஒரே சம்பவத்துக்கு பல வழக்குகளை போலீஸார் உள்நோக்கத்துடன் பதிவு செய்துள்ளனர். ஜாமீன் வழங்கினால் சாட்சிகளையும், ஆதாரங்களையும் கலைக்க மாட்டேன்” என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பு இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு போலீஸார் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 24-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.