அரசியலில் என்ட்ரி ஆரம்பித்து இருப்பதாக சசிகலா அறிவித்துள்ள நிலையில் வரும் 20-ம் தேதி சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
அதிமுகவை கைப்பற்றுவதில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் பன்னீர்செல்வம், கட்சி பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை நடத்தி வருகிறார். கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து, ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர்செல்வம் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தமிழகம், புதுச்சேரியில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் தோற்ற நிலையில், அதிமுக ஒன்றிணையாவிட்டால் வெற்றி பெற முடியாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அவருடைய ஆதரவாளர்கள் ஜேசிடி பிரபாகர், புகழேந்தி உள்ளிட்டோர், அவரது உரிமை மீட்புக் குழுவில் இருந்து விலகி, அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் தொண்டர்களை சந்தித்த சசிகலா, அதிமுக சாதி அரசியலை நோக்கி செல்வதாகவும், அதிமுக முடிந்துவிட்டது என நினைக்க வேண்டும், எனது என்ட்ரி ஆரம்பித்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், 2026 தேர்தலில் அதிமுக ஆட்சியை அமைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பன்னீர்செல்வம், உரிமை மீட்புக் குழுவின் தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் வரும் 20-ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள உட்லண்ட்ஸ் ஓட்டலில் ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தல் தோல்வி, அதிமுகவை ஒருங்கிணைப்பது, சசிகலாவுடன் இணைந்து செயல்படலாமா, வேண்டாமா, 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்க இருப்பதாக தெரிகிறது.