பிற மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களில் பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டாம்!

பிற மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களில் பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டாம் என்று தமிழக போக்குவத்து துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றன. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு சிறிய நகரங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் கூட இயக்கப்பட்டு வருகின்றன. ரயில்களில் டிக்கெட் கிடைக்காத பயணிகள் பலரும் ஆம்னி பஸ்களை நாடி செல்வதை பார்க்க முடிகிறது. சிறிய குக்கிராமங்கள் வழியாக ஆம்னி பஸ்கள் செல்வதால், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பலரும் இந்த ஆம்னி பஸ்களையே அதிகம் நாடி செல்கிறார்கள். பண்டிகை நாட்கள், வார இறுதிநாட்களில் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தப்படுவதாக பயணிகள் இந்த ஆம்னி பஸ் நிறுவனங்கள் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.

இது ஒருபக்கமென்றால் ஆம்னி பஸ்கள் பலவும் வெளி மாநில பதிவெண்களுடன் இயங்குவதை பார்த்து இருக்க முடியும். உதாரணத்திற்கு பாண்டிச்சேரி, நாகலாந்து (NL) உள்ளிட்ட பதிவெண்களுடன் அதிக அளவிலான ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இப்படி வெளிமாநில பதிவெண் கொண்ட 652 ஆம்னி பேருந்துகளால் ஆண்டொன்றுக்கு தமிழக அரசுக்கு ரூ.28.16 கோடி இழப்பு ஏற்படுகிறது என்றும் வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை தமிழக பதிவு எண்ணாக மாற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வந்தது. இதற்கான அவகாசத்தை ஆம்னி பேருந்து சங்கத்தினர் நீட்டிப்பு செய்ய வலியுறுத்தியதால், அவ்வப்போது அவகாசத்தை அரசு நீட்டித்து வந்தது. ஆனால், வரும் 14 ஆம் தேதி முதல் தமிழ்நாடு பதிவெண் இல்லாமல், தமிழ்நாட்டின் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பஸ்கள் மாநிலத்தில் இயங்க அனுமதி கிடையாது என போக்குவரத்து துறை அறிவித்தது. இதன்பிறகு பக்ரீத் விடுமுறை காரணமாக இந்த அவகாசம் 17-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிறமாநில ஆம்னி பேருந்துகளில் பயணிகள் புக் செய்ய வேண்டாம் என்று இன்று தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை கூறியிருப்பதாவது:-

நாகாலாந்து உள்ளிட்ட வெளி மாநில ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டுக்கு தமிழக அரசுக்கு ரூ. 34.56 கோடி இழப்பு ஏற்படுகிறது. குறிப்பாக சாலை வரி செலுத்தாமல் வெளி மாநில ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவதாகவும், விதிகளை மீறுவது, பயணிகளுக்கு பாதுகாப்பு இன்றி இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதையடுத்து வெளி மாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை தமிழக பதிவெண் கொண்ட பேருந்துகளாக மாற்றி இயக்குவதற்கு அறிவுறுத்தல் வழங்கியது. மேலும் இதற்காக கால அவகாசமும் வழங்கியிருந்தது. தொடர்ந்து கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் 18 ஆம் தேதியுடன் இந்த அவகாசம் முடிகிறது. எனவே நாளையில் இருந்து விதிகளை மீறி வெளிமாநில ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டால், பேருந்துகளை பறிமுதல் செய்யவும், அபராதம் விதிப்பதும் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பயணிகள் இந்த பேருந்துகளில் முன்பதிவு செய்திருந்தால் உடனே மாற்றிக்கொள்ளவும் என்றும், இந்த பஸ்களில் பயணிக்கும் போது அந்த பஸ் பறிமுதல் செய்யப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் என்பதால் பயணிகள் இது போன்ற பேருந்துகளில் முன்பதிவு செய்யவேண்டாம். அது எந்தெந்த பஸ்கள் என்பதனை பயணிகள், www.tnsta.gov.in இந்த இணையத்தளத்தில் பார்ந்து தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.