நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ஜூன் 21-ல் காங்கிரஸ் நாடு முழுவதும் போராட்டம்!

நீட் எனப்படும் இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து வரும் 21-ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், கட்சியின் அனைத்து மாநில தலைவர்கள், சட்டப்பேரவைக் குழு தலைவர்கள், அகில இந்திய பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

நீட் தேர்வு நடத்தப்பட்டது குறித்தும் தேர்வு முடிவுகள் குறித்தம் ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன. இந்த புகார்களுக்குத் தீர்வு காண நாம் முனைய வேண்டும். நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியானதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். முறைகேடுகள், வினாத்தாள் கசிவு, சில மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் போடப்பட்டது என இதில் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

வெளிப்படையாக அறிவிக்காமல் கூடுதல் மதிப்பெண் வழங்கியது மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. தொழில்நுட்ப குறைபாடுகள், முறைகேடுகள், சில தேர்வு மையங்களில் மோசடிகள் ஆகியவை நடந்துள்ளன. இது தொடர்பாக பாஜக ஆளும் பிகார், குஜராத், ஹரியானா மாநிலங்களில் நடந்துள்ள கைதுகள், எத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை வெளிப்படுத்தி உள்ளன.

மிகத் தீவிரமான குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கும் இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் கூறிய கருத்துகள் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. நீட் தேர்வு விவகாரத்தில் சிறிதுகூட அலட்சியம் காட்டப்படக் கூடாது என அது வலியுறுத்தி இருக்கிறது. இதுபோன்ற முறைகேடுகள், தேர்வின் நம்பகத்தன்மையை வெகுவாக பாதிக்கின்றன. ஏராளமான மாணவர்களின் எதிர்காலத்தை பாதிப்பதாகவும் இது இருக்கிறது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்களின் நலனை காக்கும் நோக்கில் கடுமையான சட்டம் இயற்றப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருக்கிறது.

நீட் தேர்வில் நடந்துள்ள மிகப் பெரிய ஊழல் மற்றும் முறைகேடுகளைக் கண்டித்தும், இந்த விவகாரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடைப்பிடித்து வரும் அமைதியை கண்டித்தும் மாநில தலைநகரங்களில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) அன்று மிகப் பெரிய போராட்டத்தை அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் நீதியைப் பெற அன்றைய தினம் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.