கள்ளச்சாராயம் குடித்ததால் மரணம் என்பது உண்மை அல்ல: மாவட்ட ஆட்சியர்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், கள்ளச்சாராயத்தால் அவர்கள் இறந்ததாக இன்னும் உறுதிப்படுத்தவில்லை என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்ததாகவும், மேலும், கள்ளச்சாராயம் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. கள்ளச்சாராயம் குடித்ததால் கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில் பலர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், சுரேஷ், பிரவீன், சேகர், மகேஷ், ஜெகதீஷ் ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், உடல் நலம் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, “கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் உண்மையல்ல. கள்ளச்சாராயத்தை ஒழிக்க மாவட்டம் முழுவதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்ததாக தவறான செய்தியை பரப்புகின்றனர். கள்ளச்சாராயத்தால் இறந்ததாக போலீசாரோ, மருத்துவர்களோ இன்னும் உறுதிப்படுத்தவில்லை. குடிப்பழக்கம் இல்லாத ஒருவரும் உயிரிழந்துள்ளார். வயிற்றுப் போக்கு, வலிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இருப்பினும் இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு அருகே உள்ள கருணாபுரத்தைச் சேர்ந்த 4 நபர்கள் கள்ளச்சாராயம் அருந்தி இறந்துவிட்டதாக சமூகவலைதளம் மற்றும் செய்தி தொலைகாட்சிகளில் செய்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை விசாரணையில் உடற்கூராய்வு முடித்து அறிக்கை பெற்று உண்மை நிலவரத்தை தெரிவிக்கும் வரை இதுபோன்ற செய்திகளை நம்பி அச்சமடைய வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.