கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 2 பெண்கள் உட்பட 29 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை சிலர் குடித்துள்ளனர். அன்று இரவு அதில் பலரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், அதே பகுதியை சேர்ந்த பிரவீன் (29), த.சுரேஷ் (46), ம.சுரேஷ் (45), சேகர் (61) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். அதே பகுதியில் அடுத்தடுத்து பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், 43 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பின்னர், சிகிச்சை பெற்று வந்தவர்களில் 19 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் மணி (58), கிருஷ்ணமூர்த்தி (62), இந்திரா (38) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 16 பேர் அங்கு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல, சேலம் அரசுமருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 7 பேரில் நாராயணசாமி (65), ராமு (50), சுப்பிரமணி (60) ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் கள்ளக்குறிச்சி அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் (55), ஆறுமுகம் (75),தனகோடி (55), டேவிட் (28) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நேற்றிரவு 10 மணி நிலவரப்படி 2 பெண்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். 32 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கோவிந்தராஜ் என்ற கன்னுக்குட்டியை கள்ளக்குறிச்சி போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 200 லிட்டர் விஷ சாராயத்தை பறிமுதல் செய்து, அதை விழுப்புரம் தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்தினர். இதில் மெத்தனால் ரசாயன பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் இருந்து 4 சிறப்பு மருத்துவ குழுவினர், தமிழ்நாடு சுகாதாரத் துறை திட்ட இயக்குநர் கோவிந்தராவ் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டுள்ளனர். 12 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து வந்து, சிகிச்சை பெற்று வருவோருக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
ஆட்சியர் ஷ்ரவன்குமாரை பணியிட மாற்றம் செய்து புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்தை தமிழக அரசு நியமித்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனாவை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டதோடு, புதிய எஸ்.பி.யாக ரஜத் சதுர்வேதியை நியமித்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தடுக்க தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தை பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கள்ளச் சாராய விவகாரத்தை தொடர்ந்து, மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிச்செல்வி, திருக்கோவிலூர் உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர்கள் ஆனந்தன், சிவசந்திரன், காவல் நிலைய எழுத்தரும், சிறப்பு காவல் உதவி ஆய்வாளருமான பாஸ்கரன், திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ்குமார் ஆகியோரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.