சென்னை கனமழை தொடர்பாக மக்கள் சிரமப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கி மே இறுதி வரை கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. அதே சமயம் அநேக இடங்களில் மழையும் பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஜூன் மாதம் தொடங்கிய சூழலில், வெப்பம் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால், எப்போதும் இல்லாத சூழலாக ஜூன் மாதத்தில் சென்னை உள்பட பல இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அடிக்கடி இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சூறைக் காற்றுடன் மழை அடித்து நொறுக்கியது.
இந்த சூழலில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், “சென்னையில் பெய்த திடீர் கன மழை காரணமாகவும், தொடர்ந்து மழை பெய்யும் என்ற வானிலை மைய அறிவிப்பாலும் மாநகராட்சியானது மக்களின் சிரமங்களை குறைக்கும் விதமாக அவசரப் பணிகளை, அவசியப் பணியாக செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
தமிழக அரசு மழை பெய்யும் காலங்களில் மக்களின் சிரமங்களைப் போக்குவதற்கு முன்னேற்பாடான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அவர், “சென்னையில் பெய்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கும், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளதால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கக்கூடிய நிலை ஏற்படும்” என்றும் சுட்டிக்காட்டினார்.
சென்னையில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று பெய்த மழையால் பல பகுதிகளில் சாலைகளிலும் சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது என்ற அவர், “பல தெருக்களில் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. அரசுப் பள்ளிகளிலும் மழைநீர் செல்ல வடிகால் வசதி இல்லாமல் தண்ணீர் தேங்கி குளம் போல உள்ளது. சில இடங்களில் மழைநீரும் குடிநீரும் கழிவுநீரும் கலந்துவிட்டது. மழை பெய்து, தண்ணீர் வடியாமல், மின்சாரம் தடைபட்டு, வாகன நெரிசல் மற்றும் விபத்து ஏற்பட்டு, மக்களின் நடமாட்டமும் சிரமத்திற்கு உட்பட்டு, அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது” என்றும் கூறியுள்ளார்.
இவற்றையெல்லாம் தவிர்க்கும் விதமாக, மக்களின் சிரமங்களை குறைக்கும் விதமாக மாநகராட்சி ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும், தற்போது மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.