சீமான், வைகோ தரப்பினா் மீதான வழக்கு ஒத்திவைப்பு!

திருச்சியில் பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக சீமான், வைகோ தரப்பினா் மீது நடைபெறும் வழக்கு விசாரணையை ஜூலை 19-க்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

திருச்சி மற்றும் தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதிமுக பொதுச்செயலாளா் வைகோ கடந்த 2018 ஆம் ஆண்டு விமானம் மூலம் திருச்சி வந்தாா். அவரை தொடா்ந்து அதே விமானத்தில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானும் வந்தாா். அப்போது இரு கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் போலீஸ் வாகனம் மற்றும் தடுப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதுகுறித்து திருச்சி விமான நிலைய போலீஸாா் மதிமுக தரப்பில் 5 போ் மீதும், நாம் தமிழா் கட்சியின் சீமான் உட்பட 14 போ் மீதும் தொடுத்த வழக்கு திருச்சி மாவட்ட 2 ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
நேற்று வியாழக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சீமான் ஆஜராகவில்லை. இதையடுத்து அவா் தரப்பில் உரிய விளக்கத்துடன் நீதிபதியிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து மூன்று சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணையை வரும் ஜூலை 19-க்கு ஒத்திவைத்து நீதிபதி சரவணன் உத்தரவிட்டாா்.