வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களின் பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இரண்டு வாரங்களுக்குள் அரசுமுறைப் பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் புதுடெல்லி வந்துள்ளார். வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் அவரை, டெல்லி விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்றார்.
“வங்கதேசம் இந்தியாவின் நம்பிக்கைக்கு உரிய அண்டை நாடு. இரு தரப்பு உறவைக் கொண்டாடுவதில் இந்த பயணம் முக்கிய ஊக்குவிப்பாக அமையும்” என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமைந்த பிறகு வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு அரசுப் பயணம் இதுவாகும். ஜூன் 9-ல் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட இந்தியாவின் அண்டை நாடுகளைச் சேர்ந்த ஏழு தலைவர்களில் ஹசீனாவும் ஒருவர்.
வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஹசீனாவை இன்று சந்தித்துப் பேச உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை ஷேக் ஹசீனா நாளை சந்தித்துப் பேச உள்ளார். இந்த பேச்சுவார்த்தையை அடுத்து, இரு தரப்பிலும் பல துறைகளில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியுடன் இருதரப்பு ஆலோசனைகளை நடத்தும் ஷேக் ஹசீனா, குடியரசத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோரை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.