“எதிர்க்கட்சி உறுப்பினர்களை மீண்டும் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும்” என சபாநாயகர் அப்பாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று அதிமுகவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதிமுக அதனைப் புறக்கணித்துவிட்டனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக தொடர் அமளியில் ஈடுபட்ட நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஒருநாள் அவர்களை சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க சபாநாயகர் அப்பாவு தடை விதித்தார். அவை நடவடிக்கைகள் பாதிக்கும் வகையில் அதிமுக உறுப்பினர்கள் செயல்பட்டதால் இன்று (ஜூன் 21) ஒருநாள் சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க பேரவை தலைவர் தடை விதித்தார்.
இதன்பின் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “டிசம்பர் 2001 அன்று இதேபோன்று ஒரு நிகழ்வு கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் நடைபெற்று 52 நபர்கள் மரணமடைந்தனர். 200க்கு மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் இருந்தனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று எல்லோரும் கருத்து தெரிவித்தனர்.
ஜிகே மணி, வேலுமுருகன் அப்போதும் சட்டசபையில் பேசினார்கள். கள்ளக்குறிச்சி சம்பவம் அறிந்தவுடன் தீவிர நடவடிக்கை எடுக்க நான் உத்தரவிட்டேன். அதுதொடர்பாக அனைத்து உறுப்பினர்களும் பேசிய பின்னர் விரிவாக பதிலளிக்கிறேன். 2001ல் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை, இப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள காரணத்தால், இப்போது பேசும்போது பழைய சம்பவத்தை வைத்து பேசுவார்களோ என்று பயந்து தான் திட்டமிட்டு அதிமுக நாடகத்தை அரங்கேற்றி, விதிகளுக்கு புறம்பாக நடந்துகொண்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
ஜனநாயக முறையில் இந்த சட்டசபை நடக்க வேண்டும் என விரும்புகிறேன். மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். முதலமைச்சராக, அமைச்சர்களாக இருந்தவர்கள் சட்டசபை நடந்துகொண்ட விதம் தவிர்த்து இருக்க வேண்டியது. பேரவை 120 வீதியின் கீழ் பேரவைத்தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். அதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. எனினும், என்னுடைய வேண்டுகோளாக, மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பிறகு பிரதான எதிர்க்கட்சி பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரிக்கை விடுத்தார்.
முதல்வரின் கோரிக்கையை ஏற்று பேசிய சபாநாயகர் அப்பாவு, “எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி விவாதத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது. வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் மீண்டும் அவைக்கு வர உத்தரவிடுகிறேன்” என்று தெரிவித்தார்.
சபாநாயகர் அனுமதி அளித்த நிலையில், அதனை புறக்கணிப்பதாக அதிமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து சட்டமன்றத்தில் இருந்து புறப்பட்டார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. மேலும் கள்ளக்குறிச்சி மரணங்கள் தொடர்பாக ஆளுநரை சந்தித்து பேசவும் அவர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.